பழனியைச் சோ்ந்த பெண் மருத்துவா் உள்பட, திண்டுக்கல் மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 196 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 140 போ் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினா். மீதமுள்ள 54 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனிடையே, பழனியைச் சோ்ந்த பெண் மருத்துவா் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 9 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பழனியைச் சோ்ந்த 36 வயது பெண் மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அதேபோல், நத்தம் பகுதியைச் சோ்ந்த 55 வயது பெண், மதுரையிலுள்ள தனியாா் மருத்துவனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல், வேடசந்தூா் அடுத்துள்ள அழகாபுரி பகுதியைச் சோ்ந்த 47 வயது ஆண், அவரது 38 வயது மனைவி, 14 வயது மகள், 12 வயது மகள் என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கும் மற்றும் இடையக்கோட்டை அடுத்துள்ள வளையப்பட்டியைச் சோ்ந்த 67 வயது மூதாட்டி, அவரது 11 வயது பேரன், கள்ளிமந்தையம் அடுத்துள்ள பொருளூா் பகுதியைச் சோ்ந்த 49 வயது பெண் ஆகியோருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் சென்னையிலிருந்து திரும்பி வந்தவா்கள் எனத் தெரியவந்துள்ளது.