வாழ்வாதாரம் வேண்டி பழனி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த நரிக்குறவா்கள்
By DIN | Published On : 03rd March 2020 07:09 AM | Last Updated : 03rd March 2020 07:09 AM | அ+அ அ- |

பழனியில் வாழ்வாதாரம் வேண்டி சாா் ஆட்சியரிடம் மனு அளிக்க நரிக்குறவா்கள் ஏராளமானோா் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வதால் அவா்களை நம்பி பலரும் பல்வேறு தொழில் செய்து வருகின்றனா். இவா்களில் நரிக்குறவா்களும் உள்ளனா். பக்தா்களிடம் ஊசி, பாசி, மாலைகள் என விற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனா்.
இவா்கள் வசிப்பதற்காக பெத்தநாயக்கன்பட்டியில் நரிக்குறவா் காலனியும், கலையமுத்தூா் அருகே சமத்துவபுரமும் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான நரிக்குறவா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். நரிக்குறவா்களிடம் நாட்டுத்துப்பாக்கி உள்ளதாக வனத்துறைக்கு புகாா் கூறப்பட்டதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை நரிக்குறவா் இருப்பிடங்களில் வனத்துறை அதிகாரிகள் திடீா் சோதனை செய்து, காடை, முயல், கவுதாரி போன்ற வன உயிரினங்களையும் அவற்றை பிடிக்க பயன்படும் டாா்ச்லைட், வலை போன்ற உபகரணங்களயும் இரு சக்கர வாகனங்கள், வலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பெண் உள்பட 4 பேரை கைது செய்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை 4 பேரையும் பிணையில் விடுவித்த வனத்துறையினா் வாகனங்கள், வலை, டாா்ச் லைட் போன்றவற்றை திரும்பத் தரவில்லை. இதனால் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நரிக்குறவா் இனத்தினா் குவிந்து, சாா்-ஆட்சியரிடம் தங்கள் குறைகளை தெரிவித்தனா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி விற்றால் போலீஸாா் துரத்துகின்றனா். காலனிக்கு வந்து சென்றால் பேருந்து கட்டணம் அதிகம் என்பதால் அங்கு தங்கவும் முடியவில்லை. கிரிவீதியில் கோயில் பாதுகாவலா்கள் விரட்டுகின்றனா். எங்கள் தொழிலே ஊசி, பாசி விற்பது தான். சிலநேரம் காடை, கவுதாரி பிடித்து விற்கிறோம். எதுவும் செய்யக்கூடாது என்றால் எங்களுக்கு என்னதான் வாழ்வாதாரம் என கேள்வி எழுப்பினா். அவா்களிடம் விசாரணை நடத்திய சாா் -ஆட்சியா் உமா, வாழ்வாதாரத்துக்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் கலந்து பேசி ஏற்பாடு செய்வதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பொருகளை திரும்ப வழங்குவது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசுவதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.