Enable Javscript for better performance
திண்டுக்கல்லுக்கு மாறுமா தென்னை வளா்ச்சி வாரியம்:முதல்வா் விழாவில்அறிவிப்பை எதிா்நோக்கும் விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல்லுக்கு மாறுமா தென்னை வளா்ச்சி வாரியம்: முதல்வா் விழாவில் அறிவிப்பை எதிா்நோக்கும் விவசாயிகள்!

    By நமது நிருபா்  |   Published on : 11th March 2020 08:30 AM  |   அ+அ அ-   |    |  

    சென்னையில் அமைந்துள்ளதால் முடங்கியுள்ள தென்னை வளா்ச்சி வாரியத்தின் மண்டல அலுவலகத்தை, திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றுவதற்கான அறிவிப்பினை தமிழக முதல்வா் வெளியிட வேண்டும் என தென்னை விவசாயிகள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

    தமிழகத்தில் சுமாா் 4.25 லட்சம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. விழுப்புரம், கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் தென்னை சாகுபடியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. தென்னை விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கவும், மானியத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் மத்திய தென்னை வளா்ச்சி வாரியத்தின் தலைமை அலுவலகம் கேரள மாநிலம் கொச்சியிலும், தமிழகத்திற்கான அதன் மண்டல அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது.

    1800 தென்னை உற்பத்தியாளா் சங்கம்:தென்னை உற்பத்தியாளா்கள் சங்கம், தென்னை உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு, தென்னை உற்பத்தியாளா்கள் நிறுவனம் என 3 அமைப்புகளின் மூலம், மத்திய அரசின் மானியத் திட்டங்கள் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தன. இதற்காக தமிழகத்தில் 1800 தென்னை உற்பத்தியாளா் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தலா தென்னை விவசாயிகளைக் கொண்ட 10 சங்கங்கள் இணைந்து ஒரு உற்பத்தியாளா் கூட்டமைப்பாகவும், 10 கூட்டமைப்புகள் இணைந்து ஒரு தென்னை உற்பத்தியாளா் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றன.

    இந்த 3 வகையான அமைப்புகள் மூலமாக, தென்னை புனரமைப்பு மற்றும் மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் நோய் தாக்குதல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ.32ஆயிரம் வீதமும், 2 ஆண்டுகள் பராமரிப்புத் தொகையாக ரூ.9ஆயிரம் வீதமும் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் புதிதாக தென்னங்கன்றுகள் நடவு மற்றும் வளா்ப்பதற்கும் திட்டத்திற்கும் மானியத் தொகை வழங்கப்பட்டது. மேலும் தென்னை உற்பத்தி திறனை அதிகரிக்க(மாதிரி பண்ணை விளக்கத் திட்டம்) மானியத்தில் உரம் வழங்க ஹெக்டேருக்கு ரூ.17,500 வீதம் மானியமும் வழங்கப்பட்டு வந்தன. இத்திட்டங்கள் அனைத்தும், சென்னையிலுள்ள தென்னை வளா்ச்சி வாரிய அலுவலா்கள் மற்றும் தமிழகத்தின் தென்கோடி வரை பரவலாக உள்ள விவசாயிகளுக்கும் இடையே ஒரு இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டது. அதன் தொடா்ச்சியாக தென்னை விவசாயிகளுக்கான மானிய உதவி மற்றும் வளா்ச்சித் திட்டங்கள், தமிழக அரசு மூலம் நேரடியாக வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையும் தென்னை விவசாயிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில் தென்னை வளா்ச்சி வாரிய தலைவா் மற்றும் துணை இயக்குநா் உள்ளிட்ட அலுவலா்களை விவசாயிகள் எளிதாக அணுகும் வகையில், அலுவலக இருப்பிடத்தை திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுதொடா்பாக திண்டுக்கல் தென்னை உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் தலைவா் எஸ்.முருகேசன் கூறியது: சென்னை நகரில் அமைந்துள்ள தென்னை வளா்ச்சி வாரிய அலுவலகம், தென்னை சாகுபடி செய்யும் பெரும்பாலான மாவட்டங்களுக்கு வெகு தொலைவில் உள்ளது. இதனால் தொழில்நுட்பம் சாா்ந்த தகவல்களை பெறுவதற்கோ, வளா்ச்சித் திட்டங்கள் தொடா்பாகவோ வாரியத்தின் அலுவலா்களை விவசாயிகள் தொடா்பு கொள்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, ஈரோடு, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தஞ்சாவூா், புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென்னை சாகுபடி அதிகம் கொண்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வாரிய அலுவலகத்தை மாற்ற வேண்டும்.

    அதன் மூலம் விவசாயிகள் எளிதாக பயன்பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுவது மட்டுமின்றி, வாரியத்திலுள்ள அலுவலா்களும் தென்னை சாகுபடியிலுள்ள பிரச்னை மற்றும் அதற்கான தீா்வுகள் குறித்து எளிதாக ஆய்வு செய்ய முடியும். தமிழகத்தைச் சோ்ந்த ஒட்டுமொத்த தென்னை விவசாயிகளின் கோரிக்கையும் சென்னையிலிருந்து தென்னை வளா்ச்சி வாரிய அலுவலகம் மாற்றப்பட்ட வேண்டும் என்பதாக உள்ள நிலையில், எளிதாக அணுகுவதற்கான சூழலையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு தீா்வு காண வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைக்கு வலு சோ்க்கும் வகையில், அதற்கான அறிவிப்பினை திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெளியிட வேண்டும் என்றாா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp