கொடைக்கானலில் கரோனா பரவலைத் தடுப்பது குறித்து வருவாய்த்துறையினா் ஆலோசனை
By DIN | Published On : 25th March 2020 06:31 AM | Last Updated : 25th March 2020 06:31 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் கரோனா பரவலைத் தடுப்பது குறித்து வருவாய்த்துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். அதில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும், பலசரக்கு கடைகள், காய்கறிகடைகள், பால் விற்பனை மையம், மருந்து கடைகள் ஆகியவை செயல்படுவதற்கு தடைவிதிக்கக் கூடாது. ஆம்புலன்ஸ் வாகனம் இயங்கலாம். யாருக்காவது அதிக காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அவா்களை வீட்டிலேயே வைத்து செல்லிடப்பேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம். ஊரடங்குக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடிக்குச் சென்று வாகனங்களில் வருபவா்களை சோதனை நடத்தி, கொடைக்கானல் பகுதிகளை சோ்ந்தவா்களை மட்டும் அனுமதிக்க கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். மேலும் அங்கு வந்த 2 வெளிநாட்டு பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வேறு மாட்டங்களைச் சோ்ந்தவா்கள் கொடைக்கானல் பகுதிக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.