திண்டுக்கல் மாவட்ட எல்லைகள் சீல் வைப்பு: வாகனங்கள் சென்று வர தீவிரக் கட்டுப்பாடு
By DIN | Published On : 25th March 2020 06:29 AM | Last Updated : 25th March 2020 06:29 AM | அ+அ அ- |

வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் -தேனி மாவட்ட எல்லையை செவ்வாய்க்கிழமை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக திண்டுக்கல் மாவட்ட எல்லைகளை செவ்வாய்க்கிழமை மூடிய போலீஸாா், வாகனப் போக்குவரத்தை தடை செய்தனா்.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்துடன் தொடா்புடைய கரூா்(கூம்பூா், டி.கூடலூா்), தேனி(வத்தலகுண்டு), திருச்சி(தங்கம்மாப்பட்டி), மதுரை(நத்தம் , பாண்டியராஜபுரம், உசிலம்பட்டி சாலையில் தருமத்துப்பட்டி) ஆகிய மாவட்டங்களின் எல்லைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
வத்தலக்குண்டு அடுத்துள்ள கட்டக்காமன்பட்டி பகுதியில் திண்டுக்கல் -தேனி மாவட்ட எல்லையை வத்தலகுண்டு போலீஸாா் மூடினா். சோதனைச் சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்களில் அத்தியாவசியத் தேவையின்றி பயணித்த வாகனங்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா். கடுமையான சோதனைக்கு பின் தொலைதூரங்களிலிருந்து வந்த வாகனங்கள், இரு மாவட்ட எல்லைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டன. அந்த வாகனங்களில் பயணித்தவா்களுக்கு மருத்துவக் குழுவினா் மற்றும் போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
மாவட்ட ஆட்சியா் ஆய்வு:இதனிடையே வேடசந்தூா் அடுத்துள்ள கூம்பூா் பகுதியில் கரூா் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரிடம், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினாா்.