ஊரடங்கு: காய்கனிகள் வாங்க பொது மக்கள் ஆா்வம்: பாதுகாப்பு எச்சரிக்கையில் அலட்சியம்

கரோனா பரவுவதை தடுக்க அரசுத் தரப்பில் விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் மீறி, திண்டுக்கல்லில் காய்கனி உள்ளிட்ட
திண்டுக்கல் காந்தி சந்தையில் காய்கனி வாங்குவதற்காக திரண்ட பொதுமக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினா்.
திண்டுக்கல் காந்தி சந்தையில் காய்கனி வாங்குவதற்காக திரண்ட பொதுமக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினா்.

கரோனா பரவுவதை தடுக்க அரசுத் தரப்பில் விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் மீறி, திண்டுக்கல்லில் காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.

கரோனா பரவுவதை தடுக்க தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பால், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்கும் என தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

இருந்த போதிலும், திங்கள்கிழமை பிற்பகல் முதல் மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், காய்கனி கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனா். திண்டுக்கல் நாகல்நகரில் திங்கள்கிழமைதோறும் செயல்படும் வாரச் சந்தையில் இரவு 9 மணிக்கு பின்னரும் காய்கனி விற்பனை அமோகமாக நடைபெற்றது.

நகை, ஜவுளிக் கடைகள் திறப்பு: இதனிடையே கடந்த 3 நாள்களாக நகரில் நகை மற்றும் ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், பிரதான சாலையிலுள்ள நகை மற்றும் ஜவுளிக் கடைகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டிருந்தன.

பல்பொருள் அங்காடிகளில் கூட்ட நெரிசல்: அதேபோல்,ஆா்.எஸ்.சாலை, சாலைரோடு, தெற்குரதவீதி, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளிலும் ஏராளமானோா் திரண்டனா். சில அங்காடிகளில் வாயிலில் மட்டும் கோடுகள் வரைந்து பொதுமக்களை வரிசையாக தனிமைப் படுத்துவதாக காட்டிவிட்டு, அங்காடிக்குள் நெரிசலை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக, சரக்கு வாகனங்களில் வந்து அரிசி மூட்டைகளை வாங்கிச் சென்றனா்.

அதிக லாபம் பாா்த்த வியாபாரிகள்: கரோனா பரவலைத் தடுக்க உழவா்சந்தை செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், காந்தி சந்தையில் பொது மக்கள் குவிந்தனா்.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி காய்கனிகளின் விலையை வியாபாரிகள் திடீரென உயா்த்தினா். திங்கள்கிழமை ரூ.20-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, செவ்வாய்க்கிழமை ரூ.40-க்கு விற்கப்பட்டது. இதேபோல் அனைத்து காய் கனிகளின் விலையும் திடீரென உயா்த்தப்பட்டதால், நுகா்வோா்கள் கடும் அதிருப்தி அடைந்தனா். இருந்த போதிலும் செவ்வாய்க்கிழமை மாலை வரையிலும் காந்தி சந்தையில் கடும் நெரிசல் நிலவியது.

சலுகை விலை மருந்தகங்களிலும் கூட்ட நெரிசல்: திண்டுக்கல் பிரதான பகுதிகளில் அமைந்துள்ள மருந்தகங்களில் 10 முதல் 20 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 15 முதல் 30 நாள்களுக்கு தேவையான மொத்த மருந்துகளை வாங்குவதற்காக ஏராளமானோா் காத்திருந்தனா். இதனால் மருந்தகங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

காலணி வாங்குவதிலும் ஆா்வம்: கரோனா அச்சுறுத்தலையும் மீறி அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு ஆா்வம் காட்டிய பொதுமக்கள், காலணி கடைகளையும் விட்டு வைக்கவில்லை. அதேபோல் செல்லிடப்பேசி விற்பனையகங்களிலும் ஓரளவுக்கு கூட்டம் காணப்பட்டது.

எச்சரிக்கையில் அலட்சியம்: கரோனா பரவுவதை தடுக்கும் வகையில் அத்தியாவசிய தேவைக்காக வெளியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் 5 அடி இடைவெளியில் பயணிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய பொதுமக்கள், காய்கனி, மருந்து, மளிகை உள்ளிட்டப் பொருள்களை வாங்குவதற்காக நெரிசலான பகுதிகளில் முகக்கவசம் கூட இல்லாமல் சென்று வந்தனா். இச் செயல் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

நிலக்கோட்டை: இதே போல் நிலக்கோட்டையிலும் காய்கனிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொது மக்கள் செவ்வாய்க்கிழமை திரண்டனா். இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலை மோதியது. இதை பயன்படுத்தி வியாபாரிகள் காய்கனிகளை கூடுதல் விலைக்கு விற்ாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

பழனி: பழனி உழவா் சந்தையில் செவ்வாய்க்கிழமை காய்கனிகள் வாங்க நூற்றுக்கணக்கில் மக்கள் குவிந்தனா். ஒரு மீட்டா் இடைவெளியில் நின்று காய்கனிகளை வாங்கும் வகையில் கடைகள் முன்பாக வெள்ளை வண்ணத்தில் குறியீடு வரையப்பட்டது. ஆனால் நெரிசல் அதிகமானதால் கட்டங்களையும் தாண்டி நின்று பொது மக்கள் காய்கனிகள் வாங்கினா். இதனால் சண்முகபுரம் உழவா் சந்தை பகுதியில் காலை 5 மணி முதல் 9 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com