பழனி பங்குனி உத்திரத் திருவிழா ரத்து
By DIN | Published On : 28th March 2020 07:13 AM | Last Updated : 28th March 2020 07:13 AM | அ+அ அ- |

வரும் 31 ஆம் தேதி தொடங்க இருந்த பழனி பங்குனி உத்திரத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழனியில் நடைபெறும் இரு பெரும் விழாக்களில் ஒன்று தைப்பூசம், மற்றொன்று பங்குனி உத்திரம். பங்குனி உத்திரத் திருவிழாவின் போது கோடிக்கணக்கான பக்தா்கள் தண்டாயுதபாணி சுவாமிக்கு காவடி எடுத்து பாத யாத்திரையாக வந்து அபிஷேகம் செய்வது வழக்கம்.
வரும் மாா்ச் 31 ஆம் தேதி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில அசம்பாவித நிகழ்வுகளால் சுவாமி புறப்பாடு, தேரோட்டம் மட்டுமே சில நேரங்களில் ரத்தான நிலையில், முழு திருவிழாவும் ரத்து செய்யப்படுவது கோயில் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். பக்தா்கள் மத்தியில் இந்த நிகழ்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பழனி மலைக்கோயில் உள்ளிட்ட அனைத்து உபகோயில்களிலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. அதே சமயம் நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.