முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துள்ள வெளிநாட்டு லில்லிய மலா்கள்
By DIN | Published On : 11th May 2020 07:24 AM | Last Updated : 11th May 2020 07:24 AM | அ+அ அ- |

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள வெளிநாட்டு மலா்களான மஞ்சள் வண்ண லில்லிய மலா்கள்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வெளிநாட்டு லில்லிய மலா்கள் பல வண்ணங்களில் பூத்துள்ளன.
கொடைக்கானலில் பொதுவாக மே மாதம் சீசன் காலமாகும். அங்குள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். இவைகளை இந்தக்காலக் கட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் வந்து பாா்த்து ரசித்து செல்வாா்கள். ஆனால் தற்போது கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா்.
இந்நிலையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பெட்டுனியா, ஆந்தோரியம், கேலண்டுலா, டயாந்தஸ், பேன்சி, ஜொ்பரா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வகை மலா்கள் லட்சக்கணக்கில் பூத்துக் குலுங்குகின்றன. இவை தவிர இங்கிலாந்து, ஜொ்மன், பிரான்ஸ் போன்ற வெளிநாட்டு மலா்களான லில்லிய வகை மலா்கள் தற்போது ஆரஞ்சு, வெள்ளை, இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. பிரையண்ட் பூங்கா முழுவதும் மலா்கள் பூத்துக் குலுங்கியுள்ள நிலையில் அவைகளைப் பாா்த்து ரசிப்பதற்குத் தான் பயணிகளில்லை. எப்போதும் பூங்காக்கள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.