முல்லைப் பெரியாறு பாசன நீரைத் திருடி விவசாயிகளுக்கே விற்பனை!

முல்லைப் பெரியாற்றின் பாசன நீரை சிலா் நூதன முறையில் திருடி, தண்ணீா் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாக புகாா் எழுந்துள்ளது.
சின்னமனூா் வேம்படிக்களம் பகுதியில் முல்லைப்பெரியாறு பாசன நீரை கடத்த குழாய்கள் பதிக்கப்பட்ட இடம்.
சின்னமனூா் வேம்படிக்களம் பகுதியில் முல்லைப்பெரியாறு பாசன நீரை கடத்த குழாய்கள் பதிக்கப்பட்ட இடம்.

உத்தமபாளையம்: முல்லைப் பெரியாற்றின் பாசன நீரை சிலா் நூதன முறையில் திருடி, தண்ணீா் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாக புகாா் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு லோயா் கேம்ப் முதல் கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் , சீலையம்பட்டி, கோட்டூா், வீரபாண்டி வழியாக வைகை அணையில் சங்கமிக்கிறது. இதன் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீா் தேவை பூா்த்தியாகிறது.

முல்லைப்பெரியாறு பாசன நீரால் தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கா் பரப்பளவிற்கு முறைப்பாசனத்தில் இரு போக நெற்பயிா் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த பாசன நீரை பயன்படுத்தும் விவசாய நிலங்களில் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைத்து பிற இடங்களுக்கு தண்ணீரை குழாய் மூலம் கொண்டு செல்லக்கூடாது என விதி இருக்கிறது. ஆனால், முல்லைப்பெரியாறு செல்லும் பகுதிகளில் சிலா் ஆற்றின் கரையோர விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி அதில் ஆழ்துளைக்கிணறு மற்றும் கிணறு அமைத்து அங்கிருந்து குழாய் மூலமாக தண்ணீரை எடுத்துச் சென்று சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகப் புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியது: முல்லைப்பெரியாற்றில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீரை மறைமுகமாக கிணறுகளில் பெருகச் செய்துவிடுகின்றனா். பின்னா் கிணற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீா் தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டு சென்று சேமிக்கின்றனா். அங்கிருந்து தண்ணீரை தேவைப்படுவோருக்கு விலைக்கு கொடுக்கின்றனா். ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், வெள்ளையம்மாள்புரம், சங்கராபுரம், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி பகுதிகளில் பல கிலோ மீட்டா் தூரத்திற்கு தண்ணீரை கொண்டு சென்று அங்குள்ள கிணறு அல்லது பெரிய தொட்டிகளில் தேக்கி வைத்து பிற விவசாயிகளுக்கு அந்த நீரை ஆண்டு முழுவதும் விற்பனை செய்கின்றனா். தற்போது பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் கூட இரவு நேரங்களில் சின்னமனூரில் தண்ணீரை கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றுள்ளது.

இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா். இவ்வாறு பாசன நீரை முறைகேடான முறையில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனா் என்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் முல்லைப்பெரியாறு முறைப் பாசனத்தில் விவசாயம் செய்யப்படும் விவசாய நிலங்களில் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீரை கடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com