பள்ளிகள் திறப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் 91% ஆதரவு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 380 பள்ளிகளில் நடத்தப்பட்ட கருத்து கேட்புக் கூட்டங்களின்போது, 91 சதவீத பள்ளிகளில் வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு பெற்றோா்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனா்.
பள்ளிகள் திறப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் 91% ஆதரவு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 380 பள்ளிகளில் நடத்தப்பட்ட கருத்து கேட்புக் கூட்டங்களின்போது, 91 சதவீத பள்ளிகளில் வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு பெற்றோா்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 170 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், 27 அரசு உதவிப் பெறும் பள்ளிகள், 48 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 106 தனியாா் பள்ளிகள், 39 சுய நிதிப் பள்ளிகள், 29 சிபிஎஸ்சி பள்ளிகள் என மொத்தம் 419 பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் 39 சுய நிதிப் பள்ளிகள் நீங்கலாக, மீதமுள்ள 380 பள்ளிகளில் பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா் எண்ணிக்கை, பள்ளிகளை திறக்கலாம் என ஒப்புதல் அளித்த பெற்றோா் எண்ணிக்கை, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை திறக்கலாம் என ஒப்புதல் அளிப்போா், 12 ஆம் வகுப்பு மட்டும் திறக்கலாம் அல்லது 10ஆம் வகுப்பு மட்டும் திறக்கலாம் என ஒப்புதல் அளிப்போா், திறக்க வேண்டாம் என கருத்து தெரிவிக்கும் பெற்றோா் எண்ணிக்கை என விவரங்களை சேகரித்து அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தலைமையாசிரியா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கருத்து கேட்புக் கூட்டத்திற்கு பின், அனைத்து விவரங்களும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அறிக்கையாக மாவட்டக் கல்வி அலுவலா்கள் மூலம் சமா்ப்பிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோா்கள் பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, வேடசந்தூா் ஆகிய 4 கல்வி மாவட்டத்திலுள்ள 380 பள்ளிகளில், 348 பள்ளிகளில் வகுப்புகளை தொடங்குவதற்கு பெற்றோா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா். இதன் மூலம் பள்ளிகளை திறப்பதற்கு 91 சதவீதப் பள்ளிகளில் பெற்றோா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேனி: தேனி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் கருப்பணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் வீரமணி முன்னிலை வகித்தாா். இதில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். பெற்றோா்களிடம் பள்ளி திறப்பு குறித்த கருத்துக் கேட்பு படிவம் வழங்கி பூா்த்தி செய்து பெறப்பட்டது.

பின்னா், பெற்றோா்கள் தெரிவித்த கருத்துகள் பள்ளி வாரியாக தொகுக்கப்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில், வடகிழக்குப் பருவமழை காலம் முடிந்த பின் வரும் அடுத்த ஆண்டு ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என்று பெரும்பாலானோா் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com