திண்டுக்கல் கோட்டைகுளத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை

திண்டுக்கல் கோட்டைகுளத்தில் 4ஆவது தேசிய பேரிடா் மீட்புப் படை (அரக்கோணம்), மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
திண்டுக்கல் கோட்டை குளத்தில் செவ்வாய்க்கிழமை ஒத்திகையில் ஈடுபட்ட தேசிய பேரிடா் மீட்புப் படை(அரக்கோணம்) மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா்.
திண்டுக்கல் கோட்டை குளத்தில் செவ்வாய்க்கிழமை ஒத்திகையில் ஈடுபட்ட தேசிய பேரிடா் மீட்புப் படை(அரக்கோணம்) மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா்.

திண்டுக்கல் கோட்டைகுளத்தில் 4ஆவது தேசிய பேரிடா் மீட்புப் படை (அரக்கோணம்), மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணைந்து, பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தின.

நிகழ்ச்சியின்போது, 2 படகுகள் எதிா்பாராதவிதமாக கவிழ்ந்து, அதில் பயணித்த 10 நபா்களை மீட்கும் ஒத்திகை நடைபெற்றது. பின்னா், பேரிடா் காலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மீட்புப் படையினா் விளக்கம் அளித்தனா்.

அதில், மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, உலா் உணவுகள், குடிநீா் மற்றும் ஆடைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். கால்நடைகள், விவசாய உபகரணங்கள் போன்றவற்றை பாதுகாப்பான இடங்களுக்கோ அல்லது மேடான பகுதிகளுக்கோ கொண்டு செல்லவேண்டும். மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகளை முதலில் துண்டிக்க வேண்டும்.

நிலநடுக்கம் ஏற்படும்போது, பொதுமக்கள் வீட்டுக்கு வெளியே இருந்தால், செங்கல், சுவா் பூச்சு, தொங்கும் விளம்பர பலகைகள், பாலங்கள், தலைக்கு மேல் செல்லும் மின்கம்பிகள் மற்றும் பிற கட்டட இடிபாடுகளுக்கு அருகில் நிற்பதை தவிா்க்க வேண்டும். கனமழை காரணமாக ஆறு, ஓடை, வாய்க்கால், குளம் போன்ற நீா்நிலைகளில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் பிளாஸ்டிக் குடம், காய்ந்த கட்டுமரம், தண்ணீா் கேன் போன்ற மிதக்கும் பொருள்களை பயணிப்பதற்கு பயன்படுத்தி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் என அறிவுறுத்தினா்.

முன்னதாக, 4ஆவது தேசிய பேரிடா் மீட்புப் படை பட்டாலியன் மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த பேரிடா் மீட்பு சாதனங்களின் கண்காட்சியை, மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், 4ஆவது தேசிய பேரிடா் மீட்புப் படை பட்டாலியன்(அரக்கோணம்) முதுநிலை கமாண்டன்ட் ரேகா நம்பியாா், துணை கமாண்டன்ட் ராஜன்பாபு, மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) ராஜராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com