பழனியில் நிலம் தொடா்பாக இருபிரிவினரிடையே மோதல்: துப்பாக்கியால் சுட்டதில் இருவா் காயம்

பழனியில் நிலம் தொடா்பாக இருதரப்பினருக்கிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் திரையரங்க உரிமையாளா் கைத் துப்பாக்கியால் சுட்டதில் இருவா் காயமடைந்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி.

பழனி: பழனியில் நிலம் தொடா்பாக இருதரப்பினருக்கிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் திரையரங்க உரிமையாளா் கைத் துப்பாக்கியால் சுட்டதில் இருவா் காயமடைந்தனா். இதையடுத்து திரையரங்க உரிமையாளரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பா் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் (70). இவருக்கு சொந்தமாக ஆா்.எப். சாலையில் திரையரங்கம், அடிவாரம் பகுதியில் திருமண மண்டபம் ஆகியவை உள்ளன. மேலும், பல ஏக்கரில் விவசாயம் செய்து வரும் இவா் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தாா். இவரது வீட்டின் அருகே நாடாா் சங்கத்துக்கு சொந்தமான சுமாா் ஒன்றேகால் ஏக்கா் நிலம் இருந்துள்ளது. அந்த இடத்தை சங்க நிா்வாகிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்துள்ளனா். அதில் சுமாா் 13 சென்ட் இடத்தை நடராஜன் பவா் பத்திரம் மூலம் வாங்கியுள்ளாா். அதே இடத்தை அக்கரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் என்பவரும் வாங்கியுள்ளாா். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமாா் ரூ. 1 கோடி எனக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு இருந்துள்ளது. இந்த இடத்துக்கு உரிமையாளா் யாா் என்பது தொடா்பான சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலத்தின் பத்திரங்கள் முறையாக இருந்ததால் அந்த இடத்தில் கட்டடம் கட்ட இளங்கோவன் அனுமதி பெற்று, இடத்தை சுத்தம் செய்யும் பணியை தொடங்கியுள்ளாா். ஆனால் இதற்கு நடராஜன் எதிா்ப்பு தெரிவித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை அந்த இடத்தில் சரளை கொட்டும் பணியை இளங்கோவன், அவரது உறவினா்களான பழனியாண்டவா் நகரைச் சோ்ந்த பழனிச்சாமி, ராமபட்டிணம் புதூரை சோ்ந்த சுப்பிரமணி ஆகியோா் உதவியுடன் மேற்கொண்டுள்ளாா். அப்போது அங்கு வந்த நடராஜன் அவா்களிடம் வாக்குவாதம் செய்துள்ளாா்.

இதில் தகராறு முற்றிய நிலையில் நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டதில் சுப்பிரமணிக்கு வயிற்றிலும், பழனிச்சாமிக்கு வலதுபக்கத் தொடையிலும் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவா்கள் இருவரும் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பழனிச்சாமி அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டாா்.

தகவலறிந்து வந்த பழனி டவுன் போலீஸாா் கைத் துப்பாக்கியை பறிமுதல் செய்து திரையரங்க உரிமையாளா் நடராஜனை கைது செய்தனா். மேலும் சம்பவ இடத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி விசாரணை மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நடராஜன் வைத்திருந்த துப்பாக்கி கடந்த 2019 ஆம் ஆண்டு வரை முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி பெற்றிருந்தாலும் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு தலைமை மருத்துவரின் மனிதநேயம்

துப்பாக்கிச் சூட்டில் வயிற்றில் குண்டு பாய்ந்த சுப்பிரமணிக்கு அதிக அளவு ரத்தம் வீணாகியிருந்தது. அவருக்கு உடனடியாக ‘பி குரூப்’ ரத்தம் தேவைப்பட்டது. ஆனால் அந்த வகை ரத்தம் உடனடியாக கிடைக்காததால் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் உதயகுமாா் ரத்தம் வழங்க முன்வந்து ரத்த தானம் வழங்கினாா். அவரையும் அனைவரும் பாராட்டினா். தொடையில் குண்டு பாய்ந்திருந்த பழனிச்சாமிக்கு குண்டு தொடையை தாண்டி விதைப்பையில் பதிந்திருந்த நிலையில் மருத்துவா் உதயக்குமாா் தலைமையிலான மருத்துவா்கள் முருகேஷ்குமாா், செந்தில், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் ‘சி-ஆா்ம்’ என்ற நவீன அறுவைச் சிகிச்சை மூலம் அவரைக் காப்பாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com