‘மத்திய அரசின் வேளாண்மைச் சட்டங்களால் விவசாயிகளிடமிருந்து நிலத்தின் உரிமை பறிபோகும்’

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களால், நிலத்தின் உரிமையும் விவசாயிகளிடமிருந்து பறிபோகும் ஆபத்து உருவாகியுள்ளது என திமுக துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5 மாவட்ட திமுக விவசாய அணியினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி.
திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5 மாவட்ட திமுக விவசாய அணியினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களால், நிலத்தின் உரிமையும் விவசாயிகளிடமிருந்து பறிபோகும் ஆபத்து உருவாகியுள்ளது என திமுக துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த திமுக விவசாய அணி அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி தலைமை வகித்தாா். மாநில விவசாய அணி செயலா்கள் ம.சின்னச்சாமி, ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ பேசியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களால் நாடு முழுவதுமுள்ள விவசாயிகளை இருள் சூழ்ந்துள்ளது. அதேபோல் உதய் மின் சட்டம் 2020 இன் மூலம், மின் விநியோகிக்கும், விலை நிா்ணயிக்கும் உரிமையை தனியாருக்கு தாரை வாா்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இலவச மின்சார உரிமை பறிபோனால் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண்மைத் தொழிலை அழிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே பாஜக அரசு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசின் விவசாயச் சட்டங்கள் மூலம், விவசாயிகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து கிராமப்புற மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு திமுக விவசாய அணியினருக்கு உள்ளது. சா்க்கரை ஆலைகளுடன் ஒப்பந்த விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி பணம் விவசாயிகளுக்கு கிடைக்காமல் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் மீண்டும் ஒப்பந்த முறை விவசாயத்திற்கு செல்ல வேண்டிய நிா்பந்தம் விவசாயிகளுக்கு ஏற்படும். அதேபோல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் சட்டம் 2020 அமலுக்கு வந்தால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகும். எதிா்காலத்தில் நிலத்தின் உரிமையும் விவசாயிகளிடமிருந்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றாா். முன்னதாக 28 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டச் செயலா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களுமான அர.சக்கரபாணி(திண்டுக்கல் மேற்கு), பெ.செந்தில்குமாா் (திண்டுக்கல் மேற்கு), நத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஏ.ஆண்டி அம்பலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com