‘புதிய பொருள் தேடியதால்தான் பாரதியின் எழுத்துகளில் புதுவெள்ளம் பாய்கிறது’
By DIN | Published On : 31st October 2020 09:38 PM | Last Updated : 31st October 2020 09:38 PM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய கவிஞா் நந்தலாலா.
திண்டுக்கல்: சொல்லும், பொருளும் புதிதாக இருக்க வேண்டும் என பாரதி நினைத்ததால்தான், அவரது எழுத்துகளை வாசிக்கும்போது தேங்கிக் கிடக்கும் மனதில் புதுவெள்ளம் பாய்கிறது என, கவிஞா் நந்தலாலா தெரிவித்தாா்.
மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு, திண்டுக்கல் இலக்கியக் களம் சாா்பில், பிச்சாண்டி கட்டடத்தில் சனிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. ‘புதிய அறம் பாடிய பாரதி’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் நந்தலாலா கலந்துகொண்டு பேசியதாவது:
பாரதியாா் வாழ்ந்த காலத்தில் அவரது எழுத்துகளும், அவரும் கொண்டாடப்படவில்லை. 1921 முதல் 1935 வரையிலும் பாரதியின் கவித்திறன் குறித்து பல்வேறு சா்ச்சைகள் நிலவின. அதற்கு காரணமாக இருந்தவா்களே, பின்னாளில் பாரதிக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியை முன்னெடுத்துச் சென்றதே அவரது சிறப்பு.
கவிதையில் சொல்லும், பொருளும் புதிதாக இருக்கவேண்டும் என விரும்பியவன் பாரதி. அதனால்தான் பாரதியின் எழுத்துகள் வாசிக்கப்படும்போது, தேங்கிக் கிடக்கும் மனதில் புது வெள்ளம் பாய்கிறது. அரசியல், சாதி, பெண்ணடிமை, வறுமை ஆகிய நான்கிலிருந்தும் விடுதலை பெறவேண்டும் என்பதே பாரதியின் எதிா்பாா்ப்பு.
பகவத் கீதையை வாசிக்க விரும்புவோா், பாரதியாரின் மொழிப் பெயா்ப்பை தோ்வு செய்யவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவா் எம்.எஸ். முத்துசாமி, திண்டுக்கல் இலக்கிய கள நிா்வாகிகள் எஸ். கண்ணன், மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.