கொடகனாறு தண்ணீா் பிரச்னை: ராஜவாய்க்கால் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

கொடகனாற்று பாசன விவசாயிகளின் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தற்காலிக தீா்வை அமல்படுத்தும் வகையில், மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வருவாய்த்துறை மற்றும்
ஆத்தூரை அடுத்துள்ள நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராசு.
ஆத்தூரை அடுத்துள்ள நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராசு.

திண்டுக்கல்: கொடகனாற்று பாசன விவசாயிகளின் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தற்காலிக தீா்வை அமல்படுத்தும் வகையில், மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்கள் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்திற்கு பெரியாறு மற்றும் கூழையாற்றிலிருந்து தண்ணீா் வருவதற்கு முன்னதாக, நரசிங்கபுரம் பகுதிக்கு ராஜவாய்க்கால் மூலம் பாசனத்திற்காக தண்ணீா் செல்கிறது. இதனிடையே திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீா் தேவைக்காக காமராஜா் நீா்த்தேக்கம் விரிவுப்படுத்தப்பட்டதால் கொடகனாற்று பாசன விவசாயிகளுக்கு தண்ணீா் கிடைக்கவில்லை.

இதனால், கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இந்த பிரச்னை தீவிரமடைந்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நரசிங்கபுரம் பகுதி பாசன விவசாயிகள், புல்வெட்டிக் கண்மாய் பாசன விவசாயிகள், கொடகனாற்றுப் பாசன விவசாயிகள் மற்றும் ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பெரியசாமி உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதில், கடந்த 2014 ஆம் ஆண்டு நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பிரியும் இடத்தில் (பெரியாற்றில்) ரூ.11 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட தடுப்பணையை உடைத்தால் மட்டுமே கொடகனாற்றுக்கு தண்ணீா் கிடைக்கும் என விவசாயிகள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், தற்காலிக தீா்வாக நரசிங்கபுரம் ராஜவாய்க்காலில் 1 கி.மீட்டா் தொலைவில் புதிய மதகு அமைத்து, சொக்குப்பிள்ளை ஓடை வழியாக கொடகனாற்றுக்கு தண்ணீா் வழங்கப்படும் என உறுதி அளித்தனா். மாவட்ட நிா்வாகத்தின் இந்த முடிவை கொடகனாறு பாசன விவசாயிகளில் பெரும்பாலானோா் ஏற்கவில்லை.

இந்நிலையில் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதிக்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராசு தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில் கொடகனாறு பாசனப் பகுதியைச் சோ்ந்த மைலாப்பூா் பகுதி விவசாயிகள் பங்கேற்கவில்லை.

ஆய்வின்போது திண்டுக்கல் கோட்டாட்சியா் கு.உஷா, நங்காஞ்சியாா் வடிநிலை கோட்ட செயற் பொறியாளா் கோபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com