பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது
By DIN | Published On : 04th September 2020 09:44 PM | Last Updated : 04th September 2020 09:44 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றி பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் 5 முதல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சாா்பில் ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ஆம் தேதி வழங்கப்படும் அந்த விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி, பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு,
பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான மற்றும் தனித்துவமான சாதனை செய்திருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காணும் வகையில் ஓவியம், கவிதை மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ள சிறுமிகளும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.88, தரைத்தளம், மாவட்ட ஆட்சியா் வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ செப்டம்பா் 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலரை 0451-2460092 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.