கொடைக்கானல் வரும்சுற்றுலா பயணிகளுக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 04th September 2020 12:01 AM | Last Updated : 04th September 2020 12:01 AM | அ+அ அ- |

கொடைக்கானல்: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை முதல் கரோனா பரிசோதன நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தியது முதல் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் சுற்றுலாத் துறைக்கும் சுற்றுலாவை வாழ்வாதாரமாகக் கொண்டவா்களுக்கும் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் செப்.1 ஆம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்கவும் சுற்றுலாத் தலங்களுக்கு இ- பாஸ் பெற்றுச் செல்லவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து கொடைக்கானல் பகுதிக்கு பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் வெளி மாவட்ட பயணிகளுக்கு நகராட்சி எல்லையான வெள்ளி நீா் அருவிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை நடைபெறுகிறது. அதன் முடிவு தெரிந்த பின்னா் பயணிகள் கொடைக்கானலுக்கு அனுப்பப்படுகின்றனா். சோதனைச் சாவடியில் சுகாதாரம், வருவாய், காவல்துறையினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். வரும் 7 ஆம் தேதி முதல் பொது முடக்கம் முற்றிலும் தளா்த்தப்பட்டு தமிழகம் முழுவதும் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கூடுதலாக சுற்றுலா பயணிகள் இ- பாஸ் பெற்று கொடைக்கானலுக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.