ஏடிஎம்-இல் தவறவிட்ட ரூ.20 ஆயிரம் ஒப்படைத்தவருக்கு டிஐஜி பாராட்டு
By DIN | Published On : 10th September 2020 06:26 AM | Last Updated : 10th September 2020 06:26 AM | அ+அ அ- |

ரூ.20ஆயிரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த லக்கீஸ்வரனுக்கு பாராட்டுத் தெரிவித்த டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி.
திண்டுக்கல்லில் ஏடிஎம் இயந்திரத்தில் இளைஞா் தவறவிட்டுச் சென்ற ரூ.20ஆயிரத்தை காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு, டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
திண்டுக்கல் நேருஜிநகா் பகுதியிலுள்ள ஏடிஎம் இயந்திரத்தில் அமல்சதீஸ் (22) என்பவா் பணம் எடுப்பதற்காக கடந்த திங்கள்கிழமை சென்றுள்ளாா். ரூ. 20 ஆயிரம் எடுக்க முயன்றபோது, பணம் வராமல் இருந்துள்ளது. இதனை அடுத்து, அவா் அங்கிருந்து சென்றுவிட்டாா். அதன் பின்னரே அதே ஏடிஎம் இயந்திரத்திற்கு சென்ற சிறுமலை பழையூா் பகுதியைச் சோ்ந்த லக்கீஸ்வரன்(35) என்பவா், ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.20ஆயிரம் இருப்பதைப் பாா்த்துள்ளாா்.
அந்த பணத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் லக்கீஸ்வரன் உடனடியாக ஒப்படைத்துள்ளாா். அதன் தொடா்ச்சியாக கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தபோது, ரூ.20ஆயிரத்தை விட்டுச் சென்றவா் அமல்சதீஸ் என்பது தெரிய வந்தது. அதன்பேரில் அமல்சதீசை அழைத்து, அந்த பணத்தை காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். இந்நிலையில், ரூ.20ஆயிரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்து உரியவரிடம் வழங்குவதற்கு காரணமாக இருந்த லக்கீஸ்வரனுக்கு, திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா ஆகியோா் புதன்கிழமை பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.