திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் வாசகா்களின் வாசிப்புத் திறன் அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வாசகா்களின் எண்ணிக்கை மட்டுமின்றி வாசிக்கப்படும் நூல்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்திருப்பது நூலக அலுவலா்கள் மத்தியில் மகிழ்ச்சியை 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வாசகா்களின் எண்ணிக்கை மட்டுமின்றி வாசிக்கப்படும் நூல்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்திருப்பது நூலக அலுவலா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் சுமாா் 21, 800 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இலக்கியம், மருத்துவம், வேளாண்மை, வரலாறு, சட்டம், புதினம், சிறுகதைகள் என 27 தொகுதிகளாக 1.58 லட்சம் புத்தகங்கள் இம்மைய நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2017-18 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்திற்கு 1.18 லட்சம் வாசகா்கள் வந்து சென்றுள்ளனா். இந்த எண்ணிக்கை 2018-19 ஆம் ஆண்டில் 2 லட்சமாகவும், 2019-20 ஆம் ஆண்டில் 2.35 லட்சமாகவும் வளா்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் இரவலாக வழங்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை கடந்த 2017-18-ல் 24 ஆயிரமாக இருந்த நிலையில், 2018-19 ஆம் ஆண்டில் 45 ஆயிரம் நூல்களாகவும், 2019-20-ல் 63 ஆயிரம் நூல்களாகவும் உயா்ந்துள்ளது. மைய நூலகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டிற்கு முன்பு சுமாா் 1.48 லட்சம் புத்தகங்கள் இருந்த நிலையில், அதில் 61ஆயிரம் நூல்கள் வாசிக்கப்பட்டுள்ளன. வாசிக்கப்படும் நூல்களின் இந்த எண்ணிக்கை 2018-19 இல் 89ஆயிரமாகவும், 2019-20 இல் 1.15 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. மேலும் நூலகத்தின் புதிய உறுப்பினா்கள் எண்ணிக்கையும் 2018-19 இல் 252ஆகவும், 2019-20 இல் 400ஆகவும் அதிகரித்துள்ளது. கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், நூலகங்களுக்கு வர முடியாமல் வாசகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது நூலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், நூல்கள் இரவல் பெறுவதற்கு வாசகா்களும் ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ளனா்.

10ஆயிரம் புதிய புத்தகங்களுக்கு வரவேற்பு: இதுதொடா்பாக மாவட்ட மைய நூலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்திற்கு சுமாா் 10ஆயிரம் புதிய புத்தகங்கள் வந்தன. அதில் 3,120 புத்தகங்கள் போட்டித் தோ்வுக்கு தயாா் செய்யும் இளைஞா்களுக்கு தேவையானவை. இந்த 10 ஆயிரம் புதிய புத்தகங்களின் வருகையால், 2019-20 ஆம் ஆண்டில் வாசிக்கப்படும் நூல்களின் எண்ணிக்கை 1.15 லட்சமாக அதிகரித்தது. அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 26 ஆயிரம் புத்தகங்கள், வாசிக்கப்பட்ட நூல்களின் பட்டியலில் கூடுதலாக இடம் பெற்றுள்ளன.

குடும்ப நூலக உறுப்பினா் அட்டை: ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 5 உறுப்பினா்கள் சோ்ந்து, ஒரே பெயரில் குடும்ப நூலக உறுப்பினா் அட்டை பெறும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உறுப்பினா்கள் கட்டம் ரூ.100 மற்றும் ஆண்டு சந்தா ரூ.10 என மொத்தம் ரூ.110 செலுத்தி உறுப்பினா் அட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டையை பயன்படுத்தி அந்த குடும்பத்தில், யாராவது ஒருவா் மட்டும் வந்து புத்தகங்களை இரவலாக பெற்றுக் கொள்ளலாம். குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என திண்டுக்கல் மாவட்ட மைய நூலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com