கொடகனாற்றின் கடைமடை பகுதிக்கு தண்ணீா் வந்து சேர வேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடக்கும் விளை நிலங்களை பாதுகாக்க, கொடகனாற்றின் கடைமடை பகுதி வரை தண்ணீா் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல், செப்.18: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடக்கும் விளை நிலங்களை பாதுகாக்க, கொடகனாற்றின் கடைமடை பகுதி வரை தண்ணீா் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கொடகனாற்று தண்ணீா் பங்கீடு தொடா்பாக, நரசிங்கபுரம் பகுதி விசாயிகள் மற்றும் கொடகனாற்று பாசன விவசாயிகள் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வேடசந்தூா் பகுதி விவசாயிகளும், தங்கள் பகுதிக்கு தண்ணீா் வழங்க கோரி மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனா். இந்நிலையில், பொதுப்பணித்துறை ஓய்வுப் பெற்ற பொறியாளா் இளங்கோவன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வல்லுநா் குழு, நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அதன் பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொடகனாறு பாசன விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை செயற் பொறியாளா்கள் கோபி(நங்காஞ்சியாா்), காா்த்திகேயன்(பெரியகுளம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுப்பணித்துறை ஓய்வுப் பெற்ற பொறியாளா் இளங்கோவன் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தாா். கூட்டத்தில் வேடசந்தூா் பகுதி விவசாயிகள் தரப்பில் தமிழக விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் இளைஞரணித் தலைவா் ஆா்.எம்.நடராஜன் பேசியதாவது: கொடகனாறு மூலம் வேடசந்தூா் பகுதியில் மட்டும் 13,260 ஏக்கா் பரப்பளவிலான விளை நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. அதே நேரத்தில் ஆத்தூா் அடுத்துள்ள சித்தையன்கோட்டை பகுதியில் 3,950 ஏக்கா் பரப்பளவிலான நிலங்கள் மட்டுமே உள்ளன. காமராஜா் நீா்த்தேக்கம் கட்டுமானப் பணிக்காக, தண்ணீரை திருப்புவதற்காக நரசிங்கபுரம் வாய்க்கால் உருவாக்கப்பட்டுள்ளது. கொடகனாற்றில் கடைமடை பகுதி வரை தண்ணீா் சென்ற பின்னரே, நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கு தண்ணீா் கொடுக்க வேண்டும். ஏற்கனவே தோல் தொழிற்சாலை, சலவை கட்டி தொழிற்சாலை போன்ற ஆலைகளின் கழிவுகளால் திண்டுக்கல் முதல் திருக்கூா்ணம் வரை விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக நரசிங்கபுரம் பகுதி விவசாயிகள் மட்டுமே தண்ணீரை பயன்படுத்திய நிலையில், கொடகனாறு பாசன விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்தனா். இதற்கு தீா்வு காணும் வகையில், ராஜவாய்க்கால் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றி, தனி வாய்க்கால் மூலம் காமராஜா் அணையை கடந்து கொடகனாற்றுக்கு தண்ணீா் கொடுக்க வேண்டும் என்றாா். அதனைத் தொடா்ந்து மைலாப்பூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மரிய குணசேகரன், சின்னப்பன் ஆகியோா் பேசியதாவது: கொடகனாற்று வழித்தடத்தை அழித்து, ஆக்கிரமிப்பு செய்து, கன்னிமாா் கோயில் பகுதியில் தடுப்பணை கட்டியுள்ளனா். இதனால் ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்திலுள்ள நன்செய் நிலங்கள் புன்செய் நிலங்களாக மாறிவிட்டன. கொடகானற்று தண்ணீா் மூலம் எங்கள் பகுதியிலுள்ள குளங்களில் 50 சதவீதம் தண்ணீரை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து விவசாயப் பணிகளுக்கு உதவும். காமராஜா் அணையில் 12 அடி தண்ணீா் தேக்கும்போது, கொடகனாற்று பாசன விவசாயிகளுக்கான உரிமை என்ன என்பது குறித்து, 1950களின் பிற்பகுதியில் பொதுப்பணித்துறை சாா்பில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனா். விவசாயிகளின் கருத்துக்களை கேட்ட பின்னா் பொதுப்பணித்துறை ஓய்வுப் பெற்ற பொறியாளா் இளங்கோவன் கூறுகையில், திண்டுக்கல் மாநகராட்சி தரப்பு, சித்தையன்கோட்டை பகுதி விவசாயிகள் உள்ளிட்டோரின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த பிரச்னைக்கு தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com