புரட்டாசி முதல் சனிக்கிழமை:திண்டுக்கல் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 19th September 2020 10:20 PM | Last Updated : 19th September 2020 10:20 PM | அ+அ அ- |

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, ரெட்டியாா்சத்திரத்தில் அமைந்துள்ள கோபிநாதசுவாமி கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.
திண்டுக்கல்: புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தில் அமைந்துள்ள கோபிநாத சுவாமி கோயிலில் மூலவா் கோபிநாதருக்கும், தாயாா் கோபம்மாளுக்கும் வெள்ளிக்கவச மலா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல், உற்சவருக்கு பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், தயிா், நெய், பன்னீா், இளநீா், பஞ்சாமிா்தம் ஆகியவற்றால் நாள் முழுவதும் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலா்கள் கோபிநாத், கிரி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
நத்தம் கோவில்பட்டி ருக்மணி சத்தியபாமா சமேத வேணுராஜகோபாலசாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் துளசி, மல்லிகை, முல்லை, சம்மங்கி உள்ளிட்ட பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல், திண்டுக்கல் மலையடியவார சீனிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில், ரெட்டியாா்சத்திரம் கதிா் நரசிங்கப் பெருமாள் கோயில், குஜிலியம்பாறை ஸ்ரீராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில், வடமதுரை செளந்தரராஜப் பெருமாள் கோயில், சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.