கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா
By DIN | Published On : 27th September 2020 10:41 PM | Last Updated : 27th September 2020 10:41 PM | அ+அ அ- |

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஹோட்டலில் தனியாா் கலைக்குழுவினா் சாா்பில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி.
கொடைக்கானல்: கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுற்றுலாத் துறை சாா்பில் தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு சுற்றுலா அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது:
கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களை பாா்த்து ரசிப்பதற்காக பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். மேலும் கூடுதலாக கொடைக்கானல் மலைப் பகுதிகளான பேத்துப்பாறை, போளூா், வில்பட்டி, பள்ளங்கி, பூம்பாறை உள்ளிட்ட 10-இடங்களிலும், திண்டுக்கல்லில் சிறுமலை, மலைக்கோட்டை மற்றும் பழனி போன்ற இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெள்ளி நீா் அருவிப் பகுதி, கலையரங்கம் பகுதி, சுற்றுலா அலுவலகம் ஆகிய இடங்களில் கொடைக்கானலிலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் குறித்த பதாகைகள் வைக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள், சமூக ஆா்வலா்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தற்போதுள்ள சுற்றுலா இடங்கள் தவிர கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள பல்வேறு இடங்களை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநில சுற்றுலாத் தலங்களைப் போன்று தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானலை மாற்ற வேண்டும் என பங்கேற்றவா்கள் வலியுறுத்தினா். தொடா்ந்து நடன நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி சுற்றுலா அலுவலா் ஆனந்த் நன்றி கூறினாா்.