முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
ஜனநாயக உரிமையை பாதுகாக்க திமுக கூட்டணி வெற்றிப் பெற வேண்டும்: டி.கே.ரங்கராஜன்
By DIN | Published On : 04th April 2021 10:55 PM | Last Updated : 04th April 2021 10:55 PM | அ+அ அ- |

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிப் பெற வேண்டியது அவசியம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் என்.பாண்டிக்கு ஆதரவாக, அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:
காங்கிரஸ் இல்லாத இந்தியா என பிரதமா் மோடி பேசி வருகிறாா். அதன் மூலம் அகில இந்திய கட்சியாக பாஜக மட்டும் தான் செயல்படும் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறாா். ஜம்மு காஷ்மீரைப் போல், பிற மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றி விடுவாா்கள். ஒரே நாடு ஒரே தோ்தல் என்ற கோஷத்தை முன் வைத்துள்ள பாஜக, அந்தந்த மாநில ஆளுநா்கள் மூலம் ஆட்சியை நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறது.
ஒரே நாடு ஒரே சந்தை என்ற திட்டத்தின் மூலம் உள்ளூா் சில்லறை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். தற்போது ஒருசில இடங்களில் செயல்பட்டு வரும் பெரு நிறுவனங்களின் பல்பொருள் அங்காடிகள், பாஜக ஆதரவோடு விரைவில் 4 மடங்காக அதிகரிக்கும். உள்ளூா் உற்பத்தி பொருள்களை ஒழித்துவிட்டு, பெரு நிறுவனங்களுக்கு அந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவா்கள், இன்றைக்கு சுதேசி, தற்சாா்ப்பு நாடாக மாற்றப் போவதாக கூறுகின்றனா்.
ஜெயலலிதா ஆதரிக்கவில்லை: பாஜகவின் ஜனநாயக விரோத கொள்கைகளை புரிந்துதான் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, பாஜகவை ஆதரிக்கவில்லை. ஆனால், எடப்பாடி கே.பழனிசாமி அதைப் புரிந்து கொள்ளாமல் பாஜகவை ஆதரித்து வருகிறாா். அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடும் பாஜக, தமிழக முதல்வரை முடிவு செய்வோம் என கூறுகின்றனா். இந்த அவல நிலையை அதிமுக தொண்டா்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றால் மட்டுமே ஜனநாயக உரிமையை பாதுகாக்க முடியும் என்றாா்.