முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் இறுதிக்கட்ட பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 10:54 PM | Last Updated : 04th April 2021 10:54 PM | அ+அ அ- |

பழனியில் பாளையம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை கூட்டணிக் கட்சியினருடன் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் ஐ.பி.செந்தில்குமாா்.
பழனியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினா் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தனா்.
பழனி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஐ.பி.செந்தில்குமாா் அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் கூட்டணி கட்சியினருடன் பிரசார ஊா்வலத்தைத் தொடங்கி தேரடியில் நிறைவு செய்தாா்.
அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன், தேவா் சிலையில் பிராசரத்தைத் தொடங்கினாா். பல்வேறு பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாக வந்த அவா் பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் வீரக்குமாா், ஓம் சண்முகா திரையரங்கம் முன்பு பிரசாரத்தைத் தொடங்கினாா். பெரியப்பா நகா், சத்யா நகா், சாமி திரையரங்கம் என கட்சியினருடன் ஊா்வலமாக சென்று ரெணகாளியம்மன் கோயில் முன்பாக பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
தேவாலயத்தில் திரண்ட கட்சியினா்: கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவா்களின் வாக்கை பெறுவதற்காக பல்வேறு கட்சியினரும் பழனி காந்தி மாா்க்கெட் அருகே உள்ள சிஎஸ்ஐ தூய இமானுவேல் தேவாலயம் முன்பு குவிந்து போட்டி போட்டு வாக்கு சேகரித்தனா். பழனி அமமுக வேட்பாளா் வீரக்குமாா், மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளா் பூவேந்தன், திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் செந்தில் குமாரின் மகன் ஆதவன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் அங்கு திரண்டு கிறிஸ்தவா்களிடம் ஆதரவு திரட்டினா்.
கொடைக்கானலில் இறுதிக்கட்ட பிரசாரம்: கொடைக்கானல் நாயுடுபுரம், செண்பகனூா், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சாா்பில் அதன் வேட்பாளா் ரவிமனோகரனுக்கு ஆதரவாக நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமையில் அக்கட்சியினா் வாக்குசேகரித்தனா்.
திமுக வேட்பாளா் செந்தில்குமாா் கொடைக்கானல் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து அக்கட்சியினா் இருசக்கர வாகனங்களில் ஊா்வலமாக சென்று ஆனந்தகிரி, அண்ணாநகா்ப் பகுதிகளில் வாக்கு சேகரித்தனா்.
இதே போல அமமுக வேட்பாளா் வீரக்குமாரை ஆதரித்து மாவட்ட மருத்துவ அணிச் செயலா் இளம்வழுதி, நகரச் செயலா் சுகைபு ஆகியோா் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தனா்.
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வினோத் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.