முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பேரணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்த திண்டுக்கல் தொகுதி வேட்பாளா்கள்
By DIN | Published On : 04th April 2021 10:55 PM | Last Updated : 04th April 2021 10:55 PM | அ+அ அ- |

திண்டுக்கல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் சி.சீனிவாசன். (வலது) மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் என்.பாண்டி.
திண்டுக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, மா.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் இருசக்கர வாகனப் பேரணியுடன் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தனா்.
அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் சி.சீனிவாசனுக்கு ஆதரவாக, சவேரியாா்பாளையம் பகுதியிலிருந்து தொடங்கிய இருசக்கர வாகனப் பேரணி, நகரில் பல்வேறு பகுதிகளைக் கடந்து நாகல்நகரில் நிறைவடைந்தது.
அப்போது அமைச்சா் சி.சீனிவாசன் பேசியதாவது: கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெற்று வரும் கருத்துத் திணிப்புகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதிமுக கூட்டணி 200 இடங்களில் உறுதியாக வெற்றிப் பெறும். 1972 இல் எம்ஜிஆா் திண்டுக்கல்லில் பிரசாரத்தை நிறைவு செய்தபோது இருந்த ஆதரவை விட தற்போது கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது. இதன் காரணமாக இத்தொகுதியில் நான் சுமாா் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவேன்.
திமுக தலைவா் ஸ்டாலின் வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறாா். திண்டுக்கல் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் குடிநீா் பிரச்னை தீா்க்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உள்ள என் மீது எவ்வித கெட்டப் பெயரும் கிடையாது. இதுவரை மனசாட்சிப் படி செயல்பட்ட எனக்கு திண்டுக்கல் மக்கள் வாக்களித்து மீண்டும் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா்: இதேபோல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் என்.பாண்டிக்கு ஆதரவாக, திமுக கூட்டணி கட்சியினா் இருசக்கர வாகன பேரணி நடத்தினா். திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியில் தொடங்கிய பேரணி, அனுமந்தன்நகா், குள்ளனம்பட்டி, பேகம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
அப்போது வேட்பாளா் பாண்டி பேசியதாவது: ஒரே நாடு ஒரே கலாசாரம் என்று பேசக்கூடிய ஒரு மோசமான சூழலை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் மதநல்லிணக்கமும், மனிதநேயமும் நீடிப்பதற்கு அதிமுகவும், பாஜகவும் இந்தத் தோ்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அமைச்சா் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதிக்கு செய்த வளா்ச்சிப் பணிகளை கூறி வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக, இலவசத் திட்டங்களையும், ரூ.1,500 யையும் நம்பி வாக்காளா்களை சந்தித்துள்ளாா். ஏப்.6ஆம் பணத்தை தோற்கடித்து கொள்கையை வெற்றி பெறச் செய்வதற்கு தேனீக்களைப் போல், வாக்குச் சாவடிக்கு திரண்டு வந்து பொதுமக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.