ஊதியம் வழங்குவதில் இழுபறி: குஜிலியம்பாறை தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் அவதி

குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியும் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் 290 போ், மாா்ச் மாதத்திற்கான ஊதியம் கிடைக்காததால் மாத தவணையை செலுத்த முடியாமல் அதிருப்தி அடைந்துள்ளனா்.

குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியும் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் 290 போ், மாா்ச் மாதத்திற்கான ஊதியம் கிடைக்காததால் மாத தவணையை செலுத்த முடியாமல் அதிருப்தி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாரத்தில் 98 அரசுத் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 290 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூா் ஆகிய 3 வட்டாரங்களைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான ஊதியம், வேடசந்தூா் சாா்- நிலை கருவூல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியக் கூடிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு மட்டும் ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்குவது தொடா்ந்து தாமதமாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரதி மாதம் கடைசி வேலை நாளில், பிற வட்டாரங்களைச் சோ்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் கிடைத்து வருகிறது. ஆனால், குஜிலிம்பாறை வட்டாரத்தில் மட்டும் விதிமுறைக்கு மாறாக மாதந்தோறும் காலதாமதமாக ஊதியம் வழங்கப்படுகிறது.

வங்கிகளில் கடன் பெற்றுள்ள ஆசிரியா்களுக்கு, பிரதி மாதம் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் அவரவா் வங்கிக் கணக்குகளிலிருந்து மாத தவணைத் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், குஜிலியம்பாறை வட்டாரத்தைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு சரியான தேதியில் ஊதியம் வழங்கப்படாததால், மாத தவணைத் தொகையை செலுத்த முடியாமல் அபராதம் செலுத்தும் நிலை ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக ஆசிரியா்கள் தரப்பில் கூறியதாவது: குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில் ஊழியா்கள் பற்றாக்குறை தொடா்ந்து நீடித்து வருகிறது. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வட்டார கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா் மற்றும் முதன்மை கல்வி அலுவலா் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. குறித்த நேரத்தில் ஊதியம் பெற முடியாத சூழலால், மாதந்தோறும் பல ஆசிரியா்கள் கால தாமதத்திற்கான அபராதத் தொகையை வங்கிகளில் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த அவல நிலையை கண்டித்தும், மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட வலியுறுத்தியும் குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com