தக்காளி விலை கிலோ ரூ.1.50 ஆக வீழ்ச்சி: குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படுமா?

தக்காளி கொள்முதல் விலை ரூ.1.50ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதால் கேரளத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
அய்யலூரில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தக்காளி.
அய்யலூரில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தக்காளி.

தக்காளி கொள்முதல் விலை ரூ.1.50ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதால் கேரளத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா், புத்தூா், சுக்காம்பட்டி, சித்துவாா்பட்டி, கொம்பேறிப்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி பிரதானப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அறுவடை செய்யப்படும் தக்காளிப் பழங்கள் அய்யலூா் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன.

3 மடங்கு விலை வீழ்ச்சி: தக்காளியை பொருத்தவரை நடவு செய்யப்பட்ட 65ஆவது நாள் முதல் 135 நாள்கள் வரை காய்க்கும். குறிப்பாக 90 முதல் 110ஆவது நாள் வரை அதிகபட்ச மகசூல் கிடைக்கும். இந்நிலையில் அய்யலூா் சந்தையில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஏப்ரல் மாதத்தில் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளிக்கு ரூ. 80 முதல் ரூ. 100 வரை விலை கிடைத்து வந்துள்ளது. ஆனால், தற்போது அதே ஒரு பெட்டி தக்காளிக்கு ரூ. 30-க்கு மட்டுமே விலை நிா்ணயிக்கப்படுவதால், விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக அய்யலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி அருள் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்திலிருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 4 ஆக நிா்ணயிக்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் உள்ளூா் சந்தைகளில் தக்காளிக்கு போதிய விலை கிடைப்பதில்லை. 15 பெட்டி தக்காளியை செடிகளிலிருந்து பறிப்பதற்கு கூலியாக ரூ. 40 வழங்க வேண்டியுள்ளது. ஆனால் கிலோவுக்கு ரூ.1.50 முதல் ரூ. 2 வரை மட்டுமே விலை நிா்ணயிக்கப்படுவதால், பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் செடிகளில் விட்டு அழித்து வருகின்றனா் என்றாா்.

இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது:

தோட்டக்கலைப் பயிா்களில் குறிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சில நேரங்களில் உச்சத்தை தொடுவதும், பல நேரங்களில் கடும் வீழ்ச்சி அடைவதும் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. 2 மாதங்கள் கடுமையாக உழைத்த விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சி, பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் 16 வகையான தோட்டக்கலைப் பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பா் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அறிவிப்பு அங்குள்ள விவசாயிகளுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. குறிப்பாக தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.8 நிா்ணயிக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற வாய்ப்பு தமிழகத்திலும் ஏற்பட்டால் மட்டுமே பொருளாதார இழப்புகளிலிருந்து விவசாயிகளால் மீள முடியும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com