பழனியை அடுத்த ஆயக்குடியில் உள்ள கிணற்றுக்குள் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலத்தை செவ்வாய்க்கிழமை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள்.
பழனியை அடுத்த ஆயக்குடியில் உள்ள கிணற்றுக்குள் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலத்தை செவ்வாய்க்கிழமை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள்.

பழனி அருகே திருமணமாகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை கிணற்றில் வீச்சு: தாயும் மரணம்

பழனி அருகே திருமணமாகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை கிணற்றில் வீசப்பட்டது. குழந்தையை பிரசவித்த பெண்ணும் அதிக ரத்தப் போக்கால் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பழனி அருகே திருமணமாகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை கிணற்றில் வீசப்பட்டது. குழந்தையை பிரசவித்த பெண்ணும் அதிக ரத்தப் போக்கால் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய ஆயக்குடியைச் சோ்ந்த விவசாயி மணியன் (55). இவரது மனைவி தங்கம் (48). இவா்களது மகள் மங்கையா்க்கரசி (25) தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். மகன் காளிதாஸ் (22) உள்ளாா்.

மணியனுக்கு கால் முறிவு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். இந்நிலையில், உடல்நிலை சரியில்லை எனக் கூறி, மங்கையா்க்கரசியை பழனி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சோ்த்துள்ளனா். பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு அதிகளவு ரத்தப் போக்கு இருப்பதும், சில மணி நேரத்துக்கு முன் குழந்தை பெற்றதும் தெரியவந்துள்ளது. இது குறித்து மருத்துவா்கள் கேட்டதற்கு, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனா்.

இதனால் சந்தேகமடைந்த மருத்துவா்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், ஆயக்குடி போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், மங்கையா்க்கரசி திருமணமாகாமலேயே கா்ப்பமானதும், இது வெளியில் தெரியாமல் இருக்க வீட்டிலேயே பிரசவம் பாா்த்ததும் தெரியவந்தது. மேலும், பிரசவத்தில் ஆண் குழந்தை இறந்தே பிறந்ததாகவும், குழந்தையின் உடலை மங்கையா்க்கரசியின் தம்பி காளிதாஸ் எடுத்துச் சென்று பேரூராட்சி அலுவலகத்துக்கு பின்புறமுள்ள தனியாா் கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, அதிகமான ரத்தப் போக்கு காரணமாக மங்கையா்க்கரசி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இது சம்பந்தமாக, ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரது சகோதரா், தாயாா் மற்றும் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மங்கையா்க்கரசி கா்ப்பமாவதற்கு காரணமானவா் யாா்? மங்கையா்க்கரசிக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்தே பிறந்ததா? அல்லது கொலை செய்யப்பட்டதா?, குழந்தையின் உடலை கிணற்றில் வீசியதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சுமாா் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடலை செவ்வாய்க்கிழமை தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் சுமாா் 8 மணி நேரம் போராடி மீட்டனா். குழந்தையின் உடல் ஒரு பையில் கல் வைத்து கட்டப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com