பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சித்திரைத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணம்
பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணம்

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சித்திரைத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இலக்குமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்றன.

பெருமாள் தம்பதி சமேதராக அனுமாா் வாகனம், சப்பரம், தங்கக்குதிரை வாகனம், சேஷவாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோயில் உள்பிரகாரத்தில் எழுந்தருளினாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவுகள், பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இலக்குமி சமேதா் நாராயணப் பெருமாளுக்கு வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகள் சாா்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பட்டா்கள் சிறப்பு யாகம் நடத்தி பூஜைகள் செய்ய, மங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு தேங்காய் உருட்டுதல், பூப்பந்து வீசுதல் போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பட்டா்கள் நடனமாடியபடியே மாலைகள் மாற்றினா். திருக்கல்யாணத்தை திருவள்ளரை கோயில் கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில் காா்த்திக் அய்யங்காா், பாலாஜி அய்யங்காா், வரதராஜ அய்யங்காா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

இரவு சுவாமி கோயில் உள்பிரகாரத்தில் கருடாழ்வாா் வாகனத்தில் உலா எழுந்தருளினாா். கரோனா தொற்று காரணமாக திங்கள்கிழமை (ஏப். 26) நடைபெறவிருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக சுவாமி கோயில் பிரகாரம் சுற்றிவருதல் நடைபெறுகிறது.

திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, உதவி ஆணையா் செந்தில்குமாா், செயற்பொறியாளா் வெங்கடேசன், கண்காணிப்பாளா் முருகேசன், மணியம் சேகா், ரஞ்சித்குமாா், அரிமா சுப்புராஜ், காண்ட்ராக்டா் நேரு உள்ளிட்ட சிலா் மட்டுமே பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com