வடமதுரையில் விசாரணை கைதி பலி: சார்பு ஆய்வாளர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை
By DIN | Published On : 27th April 2021 06:57 PM | Last Updated : 27th April 2021 06:57 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் காவல்துறையினரால் விசாரணை நடத்தியபோது கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் நீதிமன்றம், அடித்துக் கொலை செய்த சார்பு ஆய்வாளர் மற்றும் இரு தலைமை காவலர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நேற்று (திங்கள்கிழமை) தீர்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள மொட்டணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன் மகன் செந்தில்குமார் என்பவர் கத்தியை காட்டி பணம் பறிப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி வடமதுரை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர், சார்பு ஆய்வாளர் திருமலை முத்துசாமி, தலைமைக் காவலர் ரவிச்சந்திரன், முதல்நிலை காவலர் சசிக்குமார் ஆகியோர் செந்தில்குமாரை வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் சிறைக்கு செல்லும் வழியில் நெஞ்சு வலிப்பதாக கூறிய செந்தில்குமாரை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தலைமைக் காவலர் ரவிச்சந்திரன், வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, காவலில் இருந்துபோது கைதி உயிரிழந்திருப்பதால் இதுகுறித்து பழனி கோட்டாட்சியர் மற்றும் ஒட்டன்சத்திரம் நீதித்துறை நடுவரும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், செந்தில்குமார் கைது தொடர்பான காவல் நிலைய கோப்புகளில் அவரது கையெழுத்துக்கள் மாறுபடுவதால், வல்லுநர்கள் மூலம் அதனை கண்டறியவும், செந்தில்குமாரின் மரணத்தின் உண்மை நிலையை அறிய சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட மதுரை நகர குற்றப் புலானாய்வு குற்றப்பி பிரிவு காவல்துறையினர், அதுதொடர்பான அறிக்கையை திண்டுக்கல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதில், சார்பு ஆய்வாளர் திருமலை முத்துசாமி, தலைமைக் காவலர் ரவிச்சந்திரன், முதல்நிலை காவலர் பொன்ராம், அப்துல்வஹாப் (அப்போது மருத்துவ விடுப்பில் இருந்தவர், பின்னர் இறந்துவிட்டார்) ஆகியோர் தாக்கியதில் தான் செந்தில்குமார் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கோயில் திருவிழாவில் தகராறு செய்தவர் மீது, பணம் பறிப்பில் ஈடுபட்டதாக பொய்யான குற்றச்சாட்டை காவல்துறையினர் பதிவு செய்ததும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி ப. சரவணன் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கினார். அதில், சார்பு ஆய்வாளர் திருமலை முத்துசாமிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி சரவணன் உத்தரவிட்டார். அதேபோல் தலைமைக் கவாலர் ரவிச்சந்திரன் மற்றும் முதல்நிலை காவலர் பொன்ராம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 4-ஆவது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்த தலைமை காவலர் அப்துல்வஹாப் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதால், அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறை தண்டனை பெற்றுள்ள சீ. திருமலை முத்துசாமி(41) கீரனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகவும், பி.ரவிச்சந்திரன்(57) வேடசந்தூர் காவல் நிலைய தலைமை காவலராகவும், கே.பொன்ராம்(48) நத்தம் காவல் நிலைய தலைமை காவலராகவும்(அயல் பணி எஸ்பிசிஐடி பிரிவு) தற்போது பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.