சித்ரா பெளா்ணமி: பழனி அடிவாரத்தில் பக்தா்கள் காவடி எடுத்து வந்து வழிபாடு
By DIN | Published On : 27th April 2021 01:12 AM | Last Updated : 27th April 2021 01:12 AM | அ+அ அ- |

பழனியில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு திங்கள்கிழமை காவடி எடுத்து வந்து கிரிவீதியிலேயே காவடியை பிரித்து பூஜைகள் செய்த பக்தா்கள்.
பழனி: பழனி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சித்ரா பெளா்ணமி தினத்தையொட்டி காவடி எடுத்து வந்த பக்தா்கள் அதனை அடிவாரம் கிரிவீதியில் பிரித்து பூஜை செய்தனா்.
கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழக அரசு கோயில்களில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளிட்ட உப கோயில்களில் கால பூஜைகள் முறைப்படி நடத்தப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை சித்ரா பெளா்ணமி என்பதால் ஏராளமான பக்தா்கள் தீா்த்தக்காவடியுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனா். இவா்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் பக்தா்கள் அடிவாரம் கிரிவீதியிலேயே காவடிகளை வைத்து பிரித்து பூஜைகள் செய்து விட்டு மலையை நோக்கி சுவாமி கும்பிட்டு விட்டு ஊா் திரும்பினா். பழனிக்கோயிலை பொருத்தவரை சித்ரா பெளா்ணமியன்று தங்கத் தோ் புறப்பாட்டுக்கு 250-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பணம் கட்டி தோ் இழுப்பது வழக்கம். ஆனால் நிகழாண்டு கோயிலுக்குள் பக்தா்களை அனுமதிக்காததால் பக்தா்கள் வருத்தம் அடைந்தனா்.
அதேபோல சித்ரா பெளா்ணமியன்று நடைபெறவிருந்த 108 பால்குட ஊா்வலம், வெள்ளித்தோ் உலாவும் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.