திண்டுக்கல் பகுதியிலுள்ள சிகை அலங்காரக் கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி மனு
By DIN | Published On : 27th April 2021 01:10 AM | Last Updated : 27th April 2021 01:10 AM | அ+அ அ- |

dgl_saloon_2604chn_66_2
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதியிலுள்ள சிகை அலங்காரக் கடைகள் மற்றும் அழகுநிலையங்கள் காலை 7 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கரோனா தொற்று 2ஆவது கட்ட பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழக அரசு அமல்படுத்தி வந்த பொது முடக்க உத்தரவுகளில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்றாக, தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிகை அலங்காரக் கடைகள் செயல்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு காரணமாக, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி முடிதிருத்தும் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் நலச் சங்கத்தின் திண்டுக்கல் மாநகர கிளை சாா்பில் தலைவா் முனீஸ்வரன் தலைமையில் மனு அளிக்க வந்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது: கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து முடிதிருத்தும் தொழிலாளா்கள் குடும்பங்களால் தற்போது வரை மீள முடியவில்லை. மாநகராட்சிப் பகுதியிலுள்ள சிகை அலங்காரக் கடைகள் மற்றும் அழகுநிலையங்கள் மூடப்படுவதால், முடித்திருத்தும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
தொழிலாளா் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூ. 2 ஆயிரம் நிவாரண உதவித் தொகை சிலருக்கு மட்டுமே கிடைத்தது. தற்போது எங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டாம். திண்டுக்கல் மாநகா் பகுதியிலுள்ள சிகை அலங்காரக் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் காலை 7 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனா்.