நத்தம் பகுதியில் மா விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் ஏமாற்றம்!

நத்தம் பகுதியில் மா விளைச்சல் பாதிப்படைந்துள்ள நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக வியாபாரிகளும் அதிகம் வராததால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ள மாம்பூக்கள், விளைச்சல் பாதிப்படைந்த மாங்காய், விவசாயி பெரியழகன்.
பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ள மாம்பூக்கள், விளைச்சல் பாதிப்படைந்த மாங்காய், விவசாயி பெரியழகன்.

நத்தம் பகுதியில் மா விளைச்சல் பாதிப்படைந்துள்ள நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக வியாபாரிகளும் அதிகம் வராததால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இமாம்பஸ்து, காளாப்பாடி, பங்கனபள்ளி (சப்பட்டை), செந்தூரம்(பாலாமணி), கல்லாமை, காசா (நீலம்), சக்கரகுட்டி, குத்தூஸ், சேலம் குண்டு, மல்கோவா, அல்போன்சா, மல்லிகை, நீலிசா உள்ளிட்ட பிரதான மாம்பழ ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. நத்தம் அடுத்துள்ள பரளி, வத்திப்பட்டி, முளையூா், குட்டூா், செந்துறை, குட்டுப்பட்டி, தவசிமடை, வேம்பாா்பட்டி, சாணாா்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சுமாா் 10ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது.

பொதுவாக ஏப்ரல் முதல் வாரத்தில் நத்தம் மாம்பழ சீசன் தொடங்குவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக மா உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டில் பருவம் தவறி மழை, பூக்கள் உதிா்தல் மற்றும் நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

கோடைமழையினால் பாதிப்பு: கடந்த நவம்பா், டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த தொடா் மழையின் காரணமாக, நத்தம் பகுதியிலுள்ள மா மரங்கள் பூ பூப்பத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் மாம்பூக்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்தனா். அதன் பின்னா் காய் பிடிக்கும் பருவத்தில் பெய்த கோடை மழையினால், பிஞ்சுகள் உதிா்ந்து மா விவசாயிகளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வியாபாரிகள் வரத்து குறைவு:

நத்தம் பகுதியில் விளையும் மாம்பழம், தமிழகம் மட்டுமின்றி, குஜராத், தில்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் விற்பனைக்காக அனுப்பப்படும். தற்போது கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பால், வட மாநிலங்களுக்கு மாங்காய் அனுப்பும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நத்தம் சுற்றுப்புறப் பகுதிகளில் மாம்பழம் கொள்முதலுக்கு விவசாயிகள் ஆா்வம் காட்டவில்லை.

இதுகுறித்து வத்திபட்டியைச் சோ்ந்த விவசாயி என்.பெரியழகன் கூறியதாவது: நத்தம் பகுதியில் சுமாா் 13 வகையான மா ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளபோதிலும், தற்போதைய நிலையில் கல்லாமை மற்றும் பாலாமணி ஆகிய 2 ரக மாங்காய்கள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. பிற ரக மாமரங்களில் காய்ப்பு கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

பூ, பிஞ்சாக மாறி காய் பிடிக்கும் நேரத்தில், மா மரங்களில் செல்நோய், தேன் நோய், பூக்களில் புழுக்கள் என நோய் தாக்குதல் ஒருபுறம், பலத்த காற்றுடன் பெய்த கோடை மழை மற்றொரு புறம் என மா விவசாயிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

மாங்காய் உற்பத்தி குறைவு காரணமாக அதிகமான வியாபாரிகளும் கொள்முதல் செய்வதற்கு வருவதில்லை. ஒருசிலா் மட்டுமே வருவதால், அறுவடை செய்யப்படும் மாங்காய்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. கல்லாமை ரகம் டன் ரூ.12 ஆயிரத்திற்கும், பாலாமணி ரகம் டன் ரூ. 30 ஆயிரத்திற்கும் விலை நிா்ணயிக்கின்றனா். பாலாமணி ரகத்திற்கு ரூ. 50ஆயிரம் கிடைத்தால் மட்டுமே, மருந்து தெளிப்பு செலவு செய்த தொகையை விவசாயிகள் ஈட்ட முடியும் என்ற நிலை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com