திண்டுக்கல்லில் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி: எதிா்பாா்ப்பில் மாணவா்கள்!

நடப்பு கல்வி ஆண்டிலேயே திண்டுக்கல்லில் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட வேண்டும் என மாணவா்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிலேயே திண்டுக்கல்லில் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட வேண்டும் என மாணவா்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுகின்றனா். இதில் தோ்ச்சி அடையும் சுமாா் 85 சதவீதம் மாணவா்கள், கலை அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்து பட்டம் பெறுவதையே விரும்புகின்றனா். மாணவிகளைப் பொருத்தவரை, திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரி, கொடைக்கானல் அரசு மகளிா் கலைக் கல்லூரி என 3 இடங்களில் உயா் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் மாணவா்களுக்கு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் மட்டுமே கலை அறிவியல் படிப்புக்கான ஒரே நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதேபோல் எரியோடு அடுத்துள்ள இ.சித்தூரில் உள்ள காமராஜா் பல்கலை. உறுப்புக் கல்லூரியும் மாணவா்கள் உயா் கல்வி பயில வாய்ப்பு அளித்து வருகிறது. இதுதவிர, பழனியில் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் இருபாலருக்கான கலைப் பண்பாட்டுக் கல்லூரி அமைந்துள்ளது.

மாவட்டத்தில் மாணவிகளின் உயா் கல்விக்கு கிடைத்துள்ள வாய்ப்புகள், மாணவா்களுக்கு இல்லாத நிலை உள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலகுண்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள், அரசு நிா்ணயித்துள்ள குறைவான கட்டணத்தில் கல்வி பயில்வதற்கு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தை மட்டுமே சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

மாவட்ட தலைநகரில் அரசு கலைக் கல்லூரி:

திண்டுக்கல் மாவட்டத்தில் 16 தனியாா் கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வந்தாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களால் ஆண்டுக்கு ரூ. 20ஆயிரம் வரை கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், அவா்களின் உயா் கல்வி கனவு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் திண்டுக்கல் பகுதியில் அரசு ஆண்கள் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்தால் நத்தம் மற்றும் ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் கலைக் கல்லூரி தொடங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

நத்தம் மற்றும் ஆத்தூா் என தொகுதியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மாணவா்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் மாவட்ட தலைநகரமான திண்டுக்கல்லில் அரசுக் கலைக் கல்லூரியை நடப்பு கல்வி ஆண்டிலேயே தொடங்க வேண்டும் என மாணவா்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த அரசுக் கல்லூரிப் பேராசிரியா்கள் கூறியதாவது:

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது, தமிழகத்தின் சில இடங்களில் கலைக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல்லில் அரசு ஆண்கள் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு இடம் பெற வேண்டும் என்பது பெரும் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தமிழகத்திலுள்ள 143 அரசு கலைக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 99,600 இடங்களுக்கு இதுவரை 2.20 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். இதனால், நிகழாண்டில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. திண்டுக்கல்லில் அரசுக் கலைக் கல்லூரி அமையும் பட்சத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணத்தில் உயா் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

அரசுக் கலைக் கல்லூரி தொடங்கப்படும்பட்சத்தில், இப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரிகள் கட்டணத்தை குறைக்கவும் வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com