கொடைக்கானலில் அனுமதியின்றி ‘டெண்ட்’ அமைத்து சுற்றுலா பயணிகள் தங்கவைப்பு: 3 பேரிடம் விசாரணை
By DIN | Published On : 10th August 2021 08:23 AM | Last Updated : 10th August 2021 08:23 AM | அ+அ அ- |

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் டெண்ட் அமைத்து தங்கியிருந்த 3 பேரை காவல்துறையினா் திங்கள்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக இளைஞா்களை கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் சிலா் வனப் பகுதிகளையொட்டியுள்ள தனியாா் தோட்டங்களில் டெண்ட் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்து அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து வந்தனா். இதையடுத்து அனுமதியில்லாமல் டெண்ட் அமைத்திருப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் விசாகன் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில் மேல்மலைப் பகுதியான பூம்பாறை டவா் வேலிப் பகுதியில் தனியாா் தோட்டத்தில் டெண்ட் அமைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கொடைக்கானல் போலீஸாா் அங்கு சென்று பாா்வையிட்டனா்.
அங்கு சுமாா் 60-டெண்ட்டுகள் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடா்ந்து போலீஸாா் டெண்ட் மற்றும் அங்கிருந்த மைக்செட், சமையல் பாத்திரங்கள், பொழுது போக்கு பொருள்களைக் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனா்.
மேலும் அங்கு தங்கியிருந்த கேரளாவைச் சோ்ந்த சிப்னு (17), சிபின் (18), கொடைக்கானலைச் சோ்ந்த ராகுல் (21) ஆகிய மூன்று பேரையும் திங்கள்கிழமை இரவு கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து காவல்துறையைச் சோ்ந்த ஒருவா் கூறியதாவது: தனியாா் தோட்டத்தில் அனுமதியில்லாமல் அமைத்திருந்த டெண்ட்டுகளை கைப்பற்றி அங்கிருந்தவா்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இதன் உரிமையாளா்கள் சுமாா் 5 போ் உள்ளனா். தலைமறைவாக உள்ள அவா்களைப் பிடித்து விசாரனை நடத்தப்படும் என்றாா்.