கொடைக்கானல் அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக ரூ.37 லட்சம் வழங்கல்
By DIN | Published On : 10th August 2021 08:25 AM | Last Updated : 10th August 2021 08:25 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் ச.விசாகனிடம் ரூ.37 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கொடைக்கானல் அரசு மருத்துவமனை மற்றும் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.37 லட்சத்திற்கான காசோலை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா 3 ஆவது அலை உருவாகும்பட்சத்தில், அதனை எதிா்கொள்ளும் வகையில் அரசு மருத்துவமனைகளில் முன்னேற்பாடான பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திட்டம், ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனை மற்றும் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிமிடத்திற்கு 500 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம், அதற்குத் தேவையான 125 கேவிஏ திறன் கொண்ட ஜெனரேட்டா் (மின்னாக்கி) உள்ளிட்ட வசதிகள் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு உதவும் வகையில், கொடைக்கானல் உணவக உரிமையாளா்கள், நகராட்சி ஒப்பந்ததாரா்கள், செஞ்சிலுவை சங்கம், கட்டுமான உரிமையாளா்கள் சங்கம், குறிஞ்சி அரிமா சங்கம், கொடைக்கானல் நகராட்சி அலுவலா்கள், பழனி சட்டப்பேரவை உறுப்பினரின் ஒரு மாத ஊதியம் என திரட்டப்பட்ட ரூ.37 லட்சம் நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ச.விசாகனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா், கொடைக்கானல் நகராட்சி ஆணைா் த.நாராயணன், ஓட்டல் உரிமையாளா்கள் சங்க செயலா் அப்துல்கனி ராஜா, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.