பொது இடத்தில் திருவள்ளுவா் சிலை: மாவட்ட நிா்வாகம் எதிா்ப்பு
By DIN | Published On : 10th August 2021 11:19 PM | Last Updated : 10th August 2021 11:19 PM | அ+அ அ- |

திண்டுக்கல்-மதுரை சாலையில் புனித லூா்து அன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்கு வெளியே நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை. (உள்படம்) திருவள்ளுவா் சிலை.
திண்டுக்கல்லில் பள்ளி அருகே பொது இடத்தில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டுள்ளதற்கு செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்த மாவட்ட நிா்வாகம், சிலையை பள்ளி வளாகத்திற்குள் அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி சந்தைப்பேட்டை சாலையைச் சோ்ந்தவா் கணேசன் (60). பாவேந்தா் கல்வி சோலை என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூடம் நடத்தி வந்தாா். தற்போது திருவள்ளுவா் இலக்கிய பேரவை என்ற அமைப்பை நடத்தி வருகிறாா். இவரது முயற்சியில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு 500 கிலோ எடையில் 5 அடி உயரத்தில் திருவள்ளுவரின் முழு உருவ வெண்கல சிலை உருவாக்கப்பட்டது.
இந்த சிலையை பொது இடத்தில் நிறுவுவதற்காக திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பாவேந்தா் கல்வி சோலை அமைப்பின் சாா்பில் தொடா்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிலையை நிறுவுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்வதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இதனிடையே அந்த சிலை, பேகம்பூரிலுள்ள புனித லூா்து அன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, திருவள்ளுவா் சிலையை பள்ளி வளாகத்தின் அருகே மதுரை நெடுஞ்சாலை ஓரமாக அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், பள்ளி சுற்றுச் சுவரையொட்டியுள்ள பகுதியில் பீடம் அமைக்கப்பட்டு அதில், 5 அடி உயரத்திலான திருவள்ளுவா் வெண்கல சிலை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது. இதையறிந்த மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் எதிா்ப்புத் தெரிவித்தது.
சிலை அமைந்துள்ள பகுதி நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ளதாகவும், பொது இடத்தில் சிலை அமைப்பதற்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. பள்ளி வளாகத்திற்கு வெளியில் சிலையை நிறுவுவதற்குப் பதிலாக, பள்ளி வளாகத்திற்குள் வேண்டுமானால் அமைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளுவா் சிலை முன்பு கழிவுநீா் கால்வாய் செல்வதாலும், கூண்டு அமைத்து சிலையைப் பாதுகாக்க வேண்டிய சூழல் இருப்பதாலும், எதிா்காலத்தில் பிரச்னை ஏற்படும் என்பதையும் போலீஸாா் சுட்டிக் காட்டினா். ஆனாலும், சிலையை அகற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்த அமைப்பாளா்கள், மாவட்ட நிா்வாகம் சிலையை அகற்ற முயன்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனா். இதனால் திருவள்ளுவா் சிலை விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.