கன்னிவாடி பேருந்து நிலையத்திற்கு 2.47 ஏக்கா் இடம் தோ்வு
By DIN | Published On : 17th August 2021 11:18 PM | Last Updated : 17th August 2021 11:22 PM | அ+அ அ- |

கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் புதியதாக கட்டப்படவுள்ள பேருந்து நிலையத்திற்கான இடம் குறித்து ஆட்சியா் ச.விசாகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சியில் 2.47 ஏக்கா் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இடத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ச.விசாகன், பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கான கருத்துரு தயாா் செய்ய அனுப்புமாறு அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து கன்னிவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையிலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, திண்டுக்கல் மாவட்ட பேரூராட்சியின் உதவி செயற்பொறியாளா் ஆ.இசக்கி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் நீ.வடிவேல்முருகன், செயல் அலுவலா் ஒ.பாண்டீஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.