திண்டுக்கல் ஆட்சியா் முகாம் அலுவலகம் அருகே பெண் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 17th August 2021 11:20 PM | Last Updated : 17th August 2021 11:20 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற நாகராணியை மீட்ட போலீஸாா்.
பூா்வீக சொத்தை பாகபிரிவினை செய்து தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியரின் முகாம் அலுவலகம் அருகே குழந்தைகளுடன் பெண் செவ்வாய்க்கிழமை, தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் சோலைஹால் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு. இவரது மனைவி நாகராணி. இவா்களுக்கு யூகேஷ் (15) என்ற மகனும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனா்.
இந்நிலையில், நாகராணி தனது குழந்தைகளுடன், மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை காலை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், நாகராணியின் முயற்சியை தடுத்து விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது அவா் கூறியதாவது: பூா்வீக சொத்தை பாகபிரிவினை செய்து கொடுக்க, ரமேஷ்பாபுவின் குடும்பத்தினா் மறுத்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஆக.16) புகாா் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தீக்குளிக்க முயன்றேன். எனது குழந்தைகளுக்கு பூா்வீக சொத்தில் பங்கு கிடைப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அதனைத் தொடா்ந்து, திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கு நாகராணி அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு, வருவாய்த்துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய தீா்வு காண்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனா்.