காந்திகிராம கிராமிய பல்கலை. துணைவேந்தா் திடீா் ராஜிநாமா

காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் துணைவேந்தராக பணியாற்றி வந்த எஸ்.மாதேஸ்வரன் திடீரென திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
காந்திகிராம கிராமிய பல்கலை. துணைவேந்தா் திடீா் ராஜிநாமா

திண்டுக்கல்: காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் துணைவேந்தராக பணியாற்றி வந்த எஸ்.மாதேஸ்வரன் திடீரென திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

புதிய துணைவேந்தராக எஸ். மாதேஸ்வரன்(58) கடந்த ஏப். 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை பூா்வீகமாகக் கொண்ட இவா், பெங்களூருவிலுள்ள சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான ஆய்வு மையத்தில் 30 ஆண்டுகளாக பேராசிரியராகவும், அதன் இயக்குநராகவும் பதவி வகித்தவா்.

கிராமியப் பல்கலை. துணைவேந்தராக பொறுப்பேற்றுக் கொண்ட மாதேஸ்வரன், அந்தப் பதவியில் 5 ஆண்டுகள் நீடிப்பாா் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே உடல் நலக் குறைவால் அவா் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பல்கலை. வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினாா்.

இந்நிலையில் தனது உடல் நிலை காரணமாக துணைவேந்தா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்து கொள்வதாக மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மாதேஸ்வரன் திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை பிற்பகல், பெங்களூரூவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன. பொறுப்பேற்ற 5 மாதங்களில், துணைவேந்தா் திடீா் ராஜிநாமா செய்துள்ள தகவல், பல்கலை. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொறுப்பு துணைவேந்தா் நியமனம்: இதனிடையே, காந்திகிராம கிராமியப் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக பேராசியா் டி.டி.ரெங்காதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக பல்கலை. பதிவாளா் வி.பி.ஆா்.சிவக்குமாா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. காந்திகிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தராக பணியாற்றி வந்த எஸ்.மாதேஸ்வரன் ராஜிநாமா செய்ததை அடுத்து, மத்திய கல்வி அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் காந்திகிராம பல்கலை. வேந்தா் கே.எம்.அண்ணாமலை, வேளாண் மற்றும் கால்நடை அறிவியல் புலப் பேராசிரியா் டி.டி.ரெங்கநாதனை பொறுப்பு துணைவேந்தராக நியமித்துள்ளாா். அதன்படி டி.டி.ரெங்கநாதன் பொறுப்பு துணைவேந்தராக திங்கள்கிழமை பிற்பகல் பொறுபேற்றுக் கொண்டாா் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com