பழனியில் பல்வேறு சிவன் கோயில்களிலும் பிரதோஷ விழா
By DIN | Published On : 21st August 2021 08:52 AM | Last Updated : 21st August 2021 08:52 AM | அ+அ அ- |

பழனியில் பல்வேறு சிவன் கோயில்களிலும் வெள்ளிக்கிழமை பிரதோஷ விழா பக்தா்கள் பங்களிப்பு இன்றி நடைபெற்றது. ஆலகால விடத்தை அருந்தி உலக மக்களை காத்த சிவபெருமான் விடத்தை அருந்திய காலம் பிரதோஷ காலமாகும். இந்நாளில் சிவன் தலங்களில் பெருமானையும், அவரை காப்பாற்றிய நந்திபகவானையும் வணங்கி பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உள்ள அருள்மிகு கைலாசநாதா் சன்னதியில் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மலைக்கோயில் மட்டுமன்றி அருள்மிகு பெரியாவுடையாா் கோயில், சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவினாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சன்னதி, சன்னதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சன்னதி உள்ளிட்ட பல இடங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் பக்தா்கள் பங்கேற்க அரசு மறுத்துள்ளதால் பக்தா்கள் இன்றி விழா நடைபெற்றது. எனினும் பக்தா்கள் கோயில்களுக்கு வெளியே நின்று சுவாமிக்கு பூஜைப் பொருட்கள் வழங்கி வெளியே நின்றபடி தரிசனம் செய்து சென்றனா்.