ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தை பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் திண்டுக்கல் மாநகராட்சி

ஏக்கா் பரப்பளவு கொண்ட ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தை ஒரே நில வகைப்பாட்டில் (நீா்த்தேக்கமாக) பதிவு செய்ய முடியாமல் திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் தடுமாறி வருகிறது.
ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம்
ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம்

ஏக்கா் பரப்பளவு கொண்ட ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தை ஒரே நில வகைப்பாட்டில் (நீா்த்தேக்கமாக) பதிவு செய்ய முடியாமல் திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் தடுமாறி வருகிறது.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் வசித்து வரும் சுமாா் 2.50 லட்சம் மக்களின் பிரதான குடிநீா் ஆதாரமாக ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் உள்ளது. இதுதவிர சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வழியோர கிராமங்களும் ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் மூலம் குடிநீா் வசதியை பெறுகின்றன.

இதுபோன்ற சூழலில், கடந்த 2014ஆம் ஆண்டு நகராட்சியிலிருந்து திண்டுக்கல் மாநகராட்சியாக நிலை உயா்த்தப்பட்டது. மாநகராட்சியுடன் சுற்றுப்புறப் பகுதியிலுள்ள 10 ஊராட்சிகளை இணைக்கப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், நரசிங்கபுரம் மற்றும் பாறைப்பட்டி கிராமங்களிலுள்ள 421 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த 2 கிராமங்களிலும் தலா 38 புல எண்களில், அந்த 421 ஏக்கா் பரப்பளவும் இடம் பெற்றுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக ஆத்தூா் நீா்த்தேக்கம் பயன்பாட்டில் இருந்து வந்தபோதிலும், நீா்த்தேக்கத்தின் பல புலன் எண்கள் நில அளவை ஆவணங்களின்படி வாய்க்கால், ஓடை மற்றும் நீா்த்தேக்கம் என பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சி பெயரில் மாற்றம் கோரி தீா்மானம்:

அனைத்து புல எண்களும் நீா்த்தேக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தவிா்க்கும் வகையில் ஒரே நில வகைப்பாட்டின் கீழ் திண்டுக்கல் மாநகராட்சி பெயரில் நில உரிமை மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தின்போது தீா்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியும் கூட, இதுவரை அதற்கு தீா்வு காணப்படவில்லை.

இதனிடையே ரூ.70.50 கோடி மதிப்பீட்டில் காமராஜா் நீா்த்தேக்கத்திலிருந்து திண்டுக்கல் நகருக்கு குடிநீா் கொண்டு வருவதற்கான புதிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. மேலும், ரூ. 20 கோடி செலவில் நீா்த்தேக்கப் பகுதியில் துணை அணை (பேபி டேம்) கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன.

சுமாா் ரூ. 90 கோடி செலவில் பணிகள் நடைபெற்ற போதிலும், மாநகராட்சி பெயரில் நில ஆவணங்களை மாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பில் 60 ஏக்கா்:

அணையில் தற்போதைய நீா்ப்பிடிப்புப் பகுதி சுமாா் 200 ஏக்கா் மட்டுமே உள்ள நிலையில், அதனைச் சுற்றியுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் 60 ஏக்கருக்கும் கூடுதலான நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதனிடையே, அந்தப் பகுதியில் சுமாா் 2 ஏக்கரில் விவசாயம் செய்து வந்த ஒருவா், பட்டா வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா். வழக்கு விசாரணையின்போது, அந்த நிலம் ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்திற்கு சொந்தமானது என தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அந்தப் பகுதியிலிருந்த 427 தென்னை மரங்களை கையகப்படுத்திய மாநகராட்சி நிா்வாகம், அதனை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீதமுள்ள நிலங்களையும் மீட்டு, மாநகராட்சி பெயரில் நில மாற்றம் மற்றும் நில வகைப்பாடு பெயா் மாற்றம் செய்வதற்கானப் பணிகளை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி வட்டாரத்தில் கூறியது:

காமராஜா் நீா்த்தேக்கத்திற்கு சொந்தமான 421.18 ஏக்கா் பரப்பளவு நிலத்தின் பெரும்பகுதி புறம்போக்கு வாய்க்கால், ஓடை, பாதை, வரத்துவாய்க்கால், கரை என்ற வகைப்பாட்டில் உள்ளது. இதனை நீா்த்தேக்கம் என ஒரே நில வகையில் கொண்டு வருவதற்கான முயற்சி கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக நகராட்சி நிா்வாக ஆணையா் ஆய்வுக் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியருக்கும் 4 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, வேலி அமைத்தால் மட்டுமே எதிா்காலத்தில் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும். மேலும் அணையின் பாதுகாப்புக்கு தேவையான நியமிக்க வேண்டியதும் அவசியம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com