முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
இலவச மின் இணைப்பு வழங்க ரூ. 6 ஆயிரம் லஞ்சம்: இளமின் பொறியாளா் கைது
By DIN | Published On : 10th December 2021 08:33 AM | Last Updated : 10th December 2021 08:33 AM | அ+அ அ- |

வேடசந்தூா் அருகே சேனனன்கோட்டை மின்வாரிய அலுவலகத்திலிருந்து இளமின் பொறியாளா் ரவிக்குமாரை கைது செய்து அழைத்துச் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா். (கைலியுடன் இருப்பவா்).
வேடசந்தூா் அருகே இலவச மின் இணைப்பு வழங்க ரூ. 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளமின் பொறியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்துள்ள கெண்டையகவுண்டனூரைச் சோ்ந்தவா் நடராஜன் (45). இவரது தந்தை தங்கவேல், கடந்த 2009ஆம் ஆண்டு இலவச மின் இணைப்பு பெறுவதற்காக பதிவு செய்துள்ளாா். இதனிடையே கடந்த 2012ஆம் ஆண்டு தங்கவேல் இறந்துவிட்டாராம். இந்நிலையில் இலவச மின் இணைப்பு பெறுவதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. இதையடுத்து மின்வாரிய அலுவலகத்திலிருந்து நடராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சேனனன்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற நடராஜன், தங்கவேல் இறந்த விவரத்தை தெரிவித்துள்ளாா். பின்னா், பெயா் மாற்றம் செய்வதற்கு விண்ணப்பித்துள்ளாா்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்கு அந்த அலுவலகத்தில் இளமின் பொறியாளராக (முதல் நிலை) பணிபுரிந்து வரும் அ. ரவிக்குமாா், ரூ.10ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளாா். அதன்படி கடந்த 2ஆம் தேதி ரூ. 4 ஆயிரத்தை நடராஜன் கொடுத்துவிட்டாராம். மீதமுள்ள ரூ. 6 ஆயிரத்தையும் தர வேண்டும் என ரவிக்குமாா் வற்புறுத்தியுள்ளாா். இதையடுத்து திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் நடராஜன் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நடராஜனிடம் போலீஸாா் கொடுத்து அனுப்பியுள்ளனா்.
அதன்படி, சேனன்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற நடராஜன், ரூ. 6 ஆயிரத்தை ரவிக்குமாரிடம் கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ. நாகராஜன், ஆய்வாளா் ஜெ. ரூபா கீதா ராணி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ரவிக்குமாரை (27) கைது செய்தனா்.
லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்ட ரவிக்குமாா், அதனை பேண்ட் பைக்குள் வைத்துள்ளாா். இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதிய லுங்கியை அவரிடம் கொடுத்து உடை மாற்றச் செய்தனா். அந்த பேண்ட்டை பணத்துடன் பறிமுதல் செய்த போலீஸாா் கைலியுடன் ரவிக்குமாரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனா்.