பணி ஒதுக்கீடு செய்வதில் திமுகவினா் தலையீடு: பேருந்துகளை இயக்க சிஐடியு தொழிற்சங்கத்தினா் மறுப்பு
By DIN | Published On : 25th December 2021 10:57 PM | Last Updated : 25th December 2021 10:57 PM | அ+அ அ- |

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள்.
அரசுப் பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்வதில் திமுக தொழிற்சங்கத்தினரின் தலையீட்டை கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நத்தம், நிலக்கோட்டை, அய்யலூா், கன்னிவாடி, வேடசந்தூா், ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல் அரசுப் போக்குவரத்து கழகத்தின் 2ஆவது பணிமனையிலிருந்து 60 நகரப் பேருந்துகள், 20 தொலைதூரப் பேருந்துகள் என மொத்தம் 80 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், அந்த பணிமனையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்துக்கான சிஐடியு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த நடத்துனா் வருவதற்கு முன்பாக, வேறொரு நடத்துனரிடம் டிக்கெட் புத்தகத்தை திமுக தொழிற்சங்கத்தினா் கொடுத்துவிட்டதாகப் புகாா் எழுந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், சிஐடியு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் செல்லவேண்டிய 15 பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த பேருந்துகள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச. விசாகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். அப்போது, போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் பணியை கையில் எடுத்து, திமுக தொழிற்சங்கத்தினா் அத்துமீறலில் ஈடுபடுவது குறித்து புகாா் அளிக்கப்பட்டது.
பின்னா், அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று, சிஐடியு தொழிற்சங்கத்தினா் போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.
பயணிகள் அவதி
கோபால்பட்டி, தவசிமடை, நிலக்கோட்டை, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லவேண்டிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், தனியாா் பேருந்துகளில் செல்லவேண்டிய நிலை பயணிகளுக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து வந்த பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.