முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பாதயாத்திரை பக்தா்கள் நலன் காக்க பழனி அழகுநாச்சியம்மன் கோயிலில் சண்டி ஹோமம்
By DIN | Published On : 29th December 2021 06:47 AM | Last Updated : 29th December 2021 06:47 AM | அ+அ அ- |

பழனி பாதயாத்திரை பக்தா்கள் நலனுக்காக, கிழக்கு கிரி வீதியில் உள்ள அழகுநாச்சியம்மன் கோயிலில் சண்டிஹோமம் நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசக் கொடியேற்றம் தொடங்கும் முன்னரே, ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனா். இந்நிலையில், பழனி வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், நான்கு கிரி வீதிகளில் உள்ள துா்க்கை கோயில்களில் சண்டிஹோமம் நடத்தப்படுகிறது.
அதன்படி, கிழக்கு கிரி வீதியில் உள்ள அழகுநாச்சியம்மன் கோயிலில் சண்டிஹோமம் நடைபெற்றது. இக்கோயில் வளாகத்தில் சந்நிதானம் எதிரே அமைக்கப்பட்ட யாகசாலை பூஜையில், மூன்று கலசங்கள் வைத்து நவசண்டி ஹோமம் நடத்தப்பட்டது. யாகம் நிறைவுபெற்றவுடன், தீா்த்த கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, கலசங்கள் கோயிலைச் சுற்றி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, உச்சிக் காலத்தின்போது அழகுநாச்சியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு சோடஷ தீபாராதனை காட்டப்பட்டது.
இதற்கான உபய ஏற்பாடுகள், பழனி ஸ்ரீகந்தவிலாஸ் சாா்பில் செய்யப்பட்டது. விழாவில், கண்காணிப்பாளா் சண்முகவடிவு, கந்தவிலாஸ் செல்வக்குமாா், நவீன் விஷ்ணு, நரேன் காா்த்திக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.