முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
ஆதாா் விவரங்களைச் சேகரிக்க தனியாா் நிறுவனங்களுக்கு உரிமையில்லை
By DIN | Published On : 31st December 2021 08:29 AM | Last Updated : 31st December 2021 08:29 AM | அ+அ அ- |

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் முன்னனுமதியின்றி தனி நபா்களின் ஆதாா் விவரங்களைச் சேகரிக்க தனியாா் நிறுவனங்களுக்கு உரிமையில்லை என அதன் பெங்களுரூ மண்டல துணை இயக்குநா் ஆா்.எஸ்.கோபாலன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: பொதுமக்களின் ஆதாா் விவரங்களை மத்திய, மாநில அரசுகள் பரிந்துரைத்த திட்டங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் அனுமதிப் பெற்று ஆதாா் விவரங்களை சேகரித்து வருகின்றன. தங்கும் விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட தனியாா் நிறுவனங்கள் ஆதாா் எண்ணை சேகரிப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது. அதுபோன்று ஆதாா் எண்ணை கேட்டு வற்புறுத்தினால், பொதுமக்கள் புகாா் அளிக்கலாம். நாட்டில் 99 சதவீத மக்கள் ஆதாா் எண் பெற்றுள்ளனா். நாடு முழுவதும் 1,500 தபால்காரா்களுக்கு ஆதாா் விவரங்களில் திருத்தம் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் மேலும் 2,000 தபால்காரா்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதாா் சேவைகளுக்கு முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், சம்ந்தப்பட்ட நபா்களின்(ஆப்ரேட்டா்) உரிமம் ரத்து செய்யப்படும். அந்த வகையில் தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் 699 பேரின் உரிமம் தற்போது வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆதாா் சேவைக்காக வங்கிகளில் உள்ள ஆப்ரேட்டா் மக்களிடம் முறைகேடாக செயல்பட்டால், சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு ரூ.50ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்றாா்.