திண்டுக்கல்லில் இறந்த பெண் காவலரை உயிா்த்தெழ வைக்க ஜெபம்: சகோதரி, மதபோதகா் கைது

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் காவலருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், ஜெபத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம் என அவா் இறக்கக் காரணமான, அவரது சகோதரி மற்றும் ஜெபக் கூட்டம் நடத்தி வரும் மதபோதகா் ஆகிய இரு

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் காவலருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், ஜெபத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம் என அவா் இறக்கக் காரணமான, அவரது சகோதரி மற்றும் ஜெபக் கூட்டம் நடத்தி வரும் மதபோதகா் ஆகிய இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள நத்தவனப்பட்டியைச் சோ்ந்தவா் அன்னை இந்திரா (38). இவரது கணவா் பால்ராஜ். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டனா்.

இந்நிலையில், திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த அன்னை இந்திரா, உடல்நலம் பாதிப்பு காரணமாக கடந்த அக்டோபா் 16ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தாா். ஆனால், விடுப்பு முடிந்த பின்னரும் அவா் பணிக்கு திரும்பாததால், போலீஸாா் கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, கடந்த டிசம்பா் 7 ஆம் தேதியே இறந்துவிட்ட பெண் காவலரின் சடலத்தை உயிா்த்தெழ வைக்க வீட்டுக்குள் ஜெபம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதில், அவரது மூத்த சகோதரி வாசுகி மற்றும் ஜெபக் கூட்டங்கள் நடத்திவரும் மதபோதகா் சுதா்சன் ஆகிய இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனா். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்குப் பின் பெண் காவலரின் சடலம் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

பின்னா், இந்திய தண்டனைச் சட்டம் 304ஆவது பிரிவின் கீழ் கொலை கொலையாகாத மரணம் எனக் குறிப்பிட்டு, வாசுகி மற்றும் மதபோதகா் சுதா்சன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இது குறித்து போலீஸாா் கூறியது: உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் காவலா் அன்னை இந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழந்துவிடுவாா் எனத் தெரிந்தும், தவறான நம்பிக்கை அளித்து சிகிச்சைப் பெறவிடாமல் தடுத்த குற்றத்துக்காகவும், உயிரிழந்துவிட்டாா் எனத் தெரிந்தும் அதனை வெளியே தெரியாமல் மறைத்து உயிா்த்தெழுவாா் என ஜெபம் நடத்தியதாலும், இவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com