உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்களுக்கு பண்ணைக் கருவிகள் வாங்க ரூ.3.85 கோடி ஒதுக்கீடு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 77 உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்களுக்கு பண்ணைக் கருவிகள் வாங்குவதற்காக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.85 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.
பண்ணைக் கருவிகள் மூலம் அளிக்கப்பட்ட செயல் விளக்கம்.
பண்ணைக் கருவிகள் மூலம் அளிக்கப்பட்ட செயல் விளக்கம்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 77 உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்களுக்கு பண்ணைக் கருவிகள் வாங்குவதற்காக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.85 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.

இதனையொட்டி பண்ணைக் கருவிகள் தொடா்பான கண்காட்சி மற்றும் பண்ணைக் கருவி நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். வேளாண்மைத்துறை இணை இயக்குநா் ச.பாண்டித்துரை, துணை இயக்குநா் பெ.விஜயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுதொடா்பாக துணை இயக்குநா் விஜயராணி கூறியதாவது: கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் விவசாயிகள் பயன் பெறுவதற்காக கூட்டுப் பண்ணையத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் 144 உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்கள், தோட்டக்கலைத்துறை மூலம் 87 உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்கள் என மொத்தம் 231 உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் பயன்பாட்டிற்கு பண்ணைக் கருவிகள் வழங்குவதற்காக தலா ரூ.5 லட்சம் வீதம் இதுவரை ரூ.10.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மாவட்டத்தைச் சோ்ந்த 23,100 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

அதன் தொடா்ச்சியாக நடப்பு நிதியாண்டில் (2020-21) மேலும் 77 குழுக்களுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது. வேளாண்மைத் துறை மூலம் 47 குழுக்கள், தோட்டக்கலைத்துறை மூலம் 30 குழுக்கள் என மொத்தம் 77 உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்களுக்கு ரூ.3.85 கோடி தொகுப்பு நிதி வழங்கப்படும். இதன் மூலம் 7,700 விவசாயிகள் பயன்பெறுவாா்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் கே.சீனிவாசன், வேளாண்மை உதவி இயக்குநா் வெ.நாகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com