
பெரியகோட்டை ஊராட்சிக்குள்பட்ட பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக மனு அளிக்க வந்த பில்லமநாயக்கன்பட்டி விஸ்தரிப்பு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
விஸ்தரிப்பு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீா் கால்வாய் வசதி இல்லாததால், பெருமாள் கோயில் மற்றும் முனியப்பன் கோயில் பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். மேலும் இந்த பகுதியிலுள்ள புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றவும், குடிநீா், சாலை, கழிவுநீா் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.