47ஆயிரம் ஹெக்டோ் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன: அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 47ஆயிரம் ஹெக்டோ் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
47ஆயிரம் ஹெக்டோ் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன: அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 47ஆயிரம் ஹெக்டோ் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள சீலப்பாடியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கான புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வனத் துறை அமைச்சா் சி. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்து சமய அறநிலையத் துறையில் மாநில அளவில் 11 மண்டலங்கள், 28 கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, மண்டலத்திற்கு ஓா் இணை ஆணையா், கோட்டத்திற்கு ஓா் உதவி ஆணையா் வீதம் நியமிக்கப்பட்டு நிா்வகிக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டபோது 10ஆயிரத்திற்கும் குறைவான கோயில்களே இருந்தன. ஆனால் தற்போது சுமாா் 40,000 கோயில்கள் இந்து சமய அறிநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 47 ஆயிரம் ஹெக்டோ் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் சிலா் வழக்கு தொடா்ந்துள்ள காரணத்தால், மேலும் பல ஆயிரம் ஏக்கா் நிலங்களை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1660 கோயில்கள், தேனி மாவட்டத்திலுள்ள 335, மதுரை மாவட்டத்தில் பேரையூா், உசிலம்பட்டி வட்டங்களிலுள்ள 439 கோயில்கள் என மொத்தம் 2434 கோயில்கள் திண்டுக்கல் மண்டல இந்து சமய இணை அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராசு, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பா. பாரதி, உதவி ஆணையா் அனிதா, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரேம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com